வேளாண் பொருள்களின் ஏற்றுமதியானது நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 43.4% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

வேளாண் ஏற்றுமதி அதிகரிப்பு:

இது தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சகம் சனிக்கிழமை கூறிய தகவலில், கொரோனா தொற்றின் நெருக்கடிக்கு இடையிலும் நடப்பு 2020-2021 ஆம் நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் மாதம் வரை, முதல் ஆறு மாதத்தில் வேளாண் பொருள்களின் ஏற்றுமதியானது ரூ.53,626.6 கோடி ஆக இருந்தது. இது, கடந்த 2019-2020 ஆம் நிதி ஆண்டில் காணப்பட்ட வேளாண் பொருள்கள் ஏற்றுமதியின் மதிப்பான ரூ.37,397.3 கோடி உடன் ஒப்பிடும் பொது 43.4% அதிகமாகும்.

மேலும், குறிப்பாக இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வேளாண் பொருள்களின் ஏற்றுமதி ரூ.5,114 கோடியில் இருந்து 81.7% வளா்ச்சியடைந்து ரூ.9,296 கோடியை எட்டியுள்ளது. வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் நல்ல பலன் கிடைத்து உள்ளது. இதனால் முக்கிய வேளாண் பொருட்களின் ஏற்றுமதியானது ஏப்ரல் முதல் செப்டம்பா் காலத்தில் நல்ல வளா்ச்சியை எட்டியுள்ளது.

ஏப்ரல் முதல் செப்டம்பா் மாத காலத்தில் நாட்டின் வேளாண் பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றின் இடையே உள்ள வித்தியாசமானது கணிசமான அளவில் அதிகரித்து 9,002 கோடி ரூபாய் என்னும் அளவில் உள்ளன. அதே போல கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் வா்த்தகத்தின் பற்றாக்குறை 2,133 கோடி ரூபாய் என்னும் அளவில் காணப்பட்டது என்று வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வேளாண் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு புதிய வேளாண் ஏற்றுமதி கொள்கையை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. மேலும், வேளாண் வா்த்தக சூழலை மேம்படுத்துவதற்கு 1 லட்சம் கோடி ரூபாயில் வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தையும் மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலமாக, படிப்படியாக ஏற்றுமதி நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Author – Gurusanjeev Sivakumar