“ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின்” ஒரு பகுதியாக சனிக்கிழமையன்று 150 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்களுடன் உரையாடிய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஜனவரி 16 ஆம் தேதி ‘தேசிய ஸ்டார்ட்அப் தினமாக’ கொண்டாடப்படும் என்று அறிவித்தார். மேலும் அவர் தனது உரையில் இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு மிக முக்கிய பங்கு இருக்கும் என்றும், புதுமையான கண்டுபிடிப்பாளர்கள் பலரும் ஒவ்வொரு விதத்தில் உலக அளவில் நம் நாட்டை பெருமைப்படுத்துகின்றனர் என்றும் கூறினார். இந்த பத்தாண்டு புதுமை மற்றும் தொழில்முனைவோரை வலுப்படுத்த இந்தியாவின் ‘டெக்கேட்’ என்று அழைக்கப்படுகிறது, என்றார்.

75 வாரங்களில் 75 யுனிகார்ன் நிறுவனங்களை உருவாக்க இலக்கு

நாடு சுதந்திரம் அடைந்து 2022-ல் 75 ஆண்டுகளாவதை முன்னிட்டு 75 வாரங்களில் 75 யூனிகார்ன் நிறுவனங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கபட வேண்டும் என்று இந்திய தொழில்துறைக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார்.

நாஸ்காம் (NASSCOM) டெக் ஸ்டார்ட்-அப் அறிக்கை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ இயக்கம் தொடங்கியதில் இருந்து அதாவது மார்ச் 2021-லிருந்து இந்த 45 வாரங்களில் சுமார் 43 யூனிகார்ன்களை சேர்த்துள்ளதாவும், 75 வாரங்கள் ஆகும் நிலையில் குறைந்தபட்சம் 75 யூனிகார்ன்களை உருவாக்குவதை இலக்காக நிர்ணயித்து செயலாற்றுவோம் என்றும் கூறினார்.

நம் நட்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் இன்றியமையா பங்காற்றி வருபவை ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள். அவற்றின் தொழில் முறை, தொழில்நுட்ப திறன் பயன்பாடு, நுகர்வோரை எளிதில் அணுகும் இயல்பு ஆகியவற்றின் மூலம் தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டு வலம் வருகின்றன பல்வேறு இந்திய ஸ்டார்ட்அப்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்பு இருந்ததை காட்டிலும் அதிக முதலீடுகள் அதற்கு பிந்தைய காலகட்டத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எட்டெக், ஹெல்த்டெக் மற்றும் அக்ரிடெக் ஆகிய பல வாய்ப்புகளை எவ்வித தயக்கமுமின்றி எதிர்கொள்ளும் இந்திய ஸ்டார்ட்-அப்கள் அவர்களின் வாக்குறுதியை நிறைவேற்றிய ஆண்டாக 2021-ம் ஆண்டு நினைவுகூரப்படும் என்று கூறியுள்ளார். ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழலை மேம்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.