பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார். பல்வேறு தொழில் நிறுவனங்களும் அவரவர்களுக்கே உரிய எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் வேளையில் பின்னலாடை தொழிலுக்கு கைகொடுக்கும் விதத்தில் அறிவிப்புகள் வெளிவர வேண்டும் என திருப்பூர் தொழில்துறையின் எதிர்பார்க்கின்றனர்.

அதற்கு ஏதுவாக திருப்பூர் பின்னலாடை, ஆயத்த ஆடை மற்றும் அது சார்புடைய தொழில் நிறுவனங்கள் பலவும் என்னென்ன அறிவிப்புகளை மத்திய அரசு பட்ஜெட்டில் வழங்கினால் தொழில்துறையினர் நலம் பெறுவர் என்று விபரமாக குறிப்பிட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

திருப்பூர் தொழில்துறையினரின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்னென்ன?

குறு, சிறு, நடுத்தர ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் தேவைப்படும் உபபொருட்களை ஏற்றுமதி மேம்பாட்டு சான்றிதழை பயன்படுத்தி இறக்குமதி வரி எதுவுமின்றி இறக்குமதி செய்து கொள்ள அனுமதி கோரியுள்ளனர். இறக்குமதி பஞ்சுக்கு வரி விலக்கு கோரியுள்ளனர்.

இந்திய ஆடை உற்பத்தி துறைக்கு நெருக்கடி ஏற்படுத்தும் விதத்தில் ஜவுளியில் நமக்கு போட்டி நாடுகளான வங்கதேசம் போன்ற நாடுகள் நம் நாட்டிலிருந்து பஞ்சை இறக்குமதி செய்து, குறைந்த விலைக்கு ஆடைகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகின்றனர். இதை தவிர்க்க ஏற்றுமதி பஞ்சுக்கு தடை அல்லது பஞ்சு ஏற்றுமதிக்கு அதிகபட்ச வரி ஆகியவை விதித்தல் அவசியம். மேலும் உள்நாட்டு பஞ்சு விலை கட்டுப்படுத்தப்படவேண்டும்.

கச்சா பட்டு, பட்டு நூல் ஆகியவற்றின் மீதான 15% இறக்குமதி வரியை 10% என குறைக்க வலியுறுத்துகின்றனர். பின்னலாடை, ஆயத்த ஆடை ஆகியவற்றின் நகராமாகிய திருப்பூர் போன்ற முக்கிய தொழில் நகரங்களில் தொழிலாளர் குடியிருப்பு வசதி உருவாக்கி கொடுத்தல்.

தொழில் நிறுவனங்கள் அவ்வாறு குடியிருப்பு வசதியை தம் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தும் சூழ்நிலையில் அவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டியுள்ளனர். துறை சார்ந்த பிரச்சினைகளை முறையாக அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று தீர்வு காண பின்னலாடைக்கென்று தனி வாரியம் அமைத்தல். புதுமையான ஆடைகள் தயாரிப்புக்கு வருமான வரிவிலக்கு.

பின்னலாடை துறைக்கு ஆராய்ச்சி மையம் அமைத்தல். மேற்படி பல கோரிக்கைகள் அடங்கிய தங்கள் விண்ணப்பத்தை திருப்பூர் தொழில் அமைப்பினர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு 2022-23 மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் இருக்குமா என்று பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.