ஏழ்மை யாரையும் தூங்கவிடாது. சில திறமைகள் சூழ்நிலையால் மறைக்கப்படலாம். தகுந்த சமயம் வரும்போது அவை புது உருப்பெற்று மலர்ச்சி பெறும் என்பதை சமீபத்தில் நிரூபித்திருக்கிறார் மஹாராஷ்ட்ர மாநிலத்தை சேர்ந்த தத்தாத்ராய லோகர்.

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கார் வாங்குவதென்பது நடக்காத காரியம். அதுவே பெற்ற மகளின் ஆசை அதுவானால் அதை பூர்த்தி செய்ய முடியாதோ என்ற தவிப்பில் இருக்கும் ஒரு தந்தையால் எப்படி உறங்க முடியும். அப்போது உதித்ததே தம்மிடம் இருக்கும் பழைய பொருட்களையே ஒரு ஓடும் காராக மாற்றிக்காட்டவேண்டும் என்ற தத்தாத்ராயவின் சிந்தனை. ஆம், தாமே ஒரு காரை உருவாக்கிட வேண்டும் என்று நினைத்தார்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

இது திருவள்ளுவர் வாய்மொழி. தாம் செய்யவேண்டிய செயலை கருத்தில் நிறுத்தி அதற்கான வழிமுறைகளையும் தாமே உருவாக்கி, செய்தும் முடித்துவிட்டார் அந்த தந்தை. தம்மிடம் இருந்த பழைய உலோக பொருள்கள், துணி, கண்ணாடி என்று கையில் கிடைத்த பொருள்களை எல்லாம் வைத்தே அசத்தலாக ஒரு காரை தயாரித்தார் அதுவும் ரூ.60,000 செலவில். அதை பார்த்த மகள் அடைந்த உற்சாகத்திற்கு அளவென்பதே கிடையாது.

தத்தாத்ராய லோகர் உருவாக்கிய கார் பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்டது. சமூக வலைத்தளங்களில் வைரலானது. பல இடங்களிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இது வெறும் செய்தியாக நில்லாமல் மஹிந்திரா கார் நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திராவையும் இச்செய்தி சென்றடைந்தது.

ஆனந்த் மஹிந்திரா, தத்தாத்ராய லோகர் உருவாக்கிய காரை பார்த்தார். அசந்து போன அவர் தத்தாத்ராய லோகரை வெகுவாகப் பாராட்டினார். அடிக்கடி ட்விட்டரில் பல்வேறு இடுகைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆனந்த் மஹிந்திரா, மற்றவர்களின் அற்புதமான படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையிலும் பல ட்வீட்களை செய்யத் தவற மாட்டார்.

அதே போல் தத்தாத்ராய லோகரின் முயற்சியையும் பாராட்டினார் “இவரது முயற்சியில் உருவாக்கிய இந்த கார் தெளிவான எந்த விதிமுறைகளையும் பூர்த்தி செய்யவில்லை, ஆனால் ‘குறைவானதை கொண்டு நிறைய’ உருவாக்கும் நம் மக்களின் செயல்திறனை பாராட்டுவதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன். தத்தாத்ராய லோகர் உருவாக்கிய கார் விதிமுறைகளை மீறப்பட்டுள்ளதால் விரைவிலோ அல்லது பிறகோ அவரது கார் இயங்குவதற்கு அதிகாரிகள் தடை விதிக்கலாம். ஆனாலும் நான் தனிப்பட்ட முறையில் அவருக்கு ஒரு புதிய பொலேரோ காரை வழங்குவேன். மேலும் குறைந்த வளத்தை வைத்து, அதிகம் செய்யலாம் என்று அவர் முயற்சி நமக்கு உணர்த்துவதால் அவரது உருவாக்கமான அந்த கார் நம்மை ஊக்குவிக்கும் வகையில் மஹிந்திரா ரிசர்ச் வேலியில் காட்டப்படலாம்” என்று அவர் வீடியோ இடுகையிடுன்போதும் ட்வீட் செய்தார். ஆனந்த் மஹிந்திராவின் இந்த ட்வீட் அனைவரையும் பரவசப்படுத்தியுள்ளது. யாரையும் தூங்க விடா ஏழ்மை, சில முயற்சிகளுக்கு வித்திடவும் செய்யும் – தத்தாத்ராய லோகரின் புதிய கார் நமக்கு உணர்த்துவதும் இதுவே.