இந்த மாதம் இறுதியில் அதாவது ஜனவரி 31-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது 4-வது பட்ஜெட்டை கூட்டத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, ஒரு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் என்பது பல்வேறு துறைகளின் பால் அரசின் உத்தேசிக்கப்பட்ட வரவு செலவுகளின் பட்டியலாகும். நாட்டின் பொருளாதாரத்தில் பங்கு பெற்றிருக்கும் சாதாரண குடிமகனிலிருந்து முன்னணி நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் என அனைத்து பிரிவினருக்கும் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட் அறிவிப்பு மீது பலதரப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கும். பொருட்கள் மீதான வரி, விலைவாசி, சலுகைகள், திட்டங்கள் என எல்லாவற்றையுமே உள்ளடக்கியதாகத்தான் இருக்கும் ஓர் நிதிநிலை அறிக்கை.

யூனியன் பட்ஜெட் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்

முதல் முழு நேர பெண் நிதியமைச்சர் யார் தெரியுமா?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-ம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன் மூலம் இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல் முழு நேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

நிதியமைச்சகத்தில் நடத்தப்படும் ‘அல்வா’ விழா பற்றி தெரியுமா?

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன், நிதியமைச்சகத்தில் ‘அல்வா’ விழா பாரம்பரியமாக நடத்தப்படுகிறது. பட்ஜெட் அச்சிடப்படும் இடத்தில் இந்த ‘அல்வா’ தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. இந்த விழா பட்ஜெட் அச்சிடுவதற்கான முன்னோட்ட நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்த தயாரிப்புப் பணியில் ஈடுபடும் கடைநிலை ஊழியர் முதல் அமைச்சர் வரை அனைவரும் இந்த அல்வா நிகழ்வை கொண்டாடுவார்கள்.

வெளியுலக தொடர்பு துண்டிக்கப்படும் நிதியமைச்சக ஊழியர்கள்

அல்வா கிண்டும் நிகழ்ச்சி தொடங்கியதும், பட்ஜெட் தயாரிப்பு மற்றம் அச்சடிப்புப் பணியில் உள்ள நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், நிதியமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக் வளாகத்திலேயே பூட்டப்படுவார்கள். அவர்களுக்கான வெளியுலக தொடர்பு வசதிகள் அனைத்தும் துண்டிக்கப்படும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில்தான் அந்த வளாகக் கதவுகள் திறக்கப்படும்.

ஜனவரி 31-ம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும். அதில் குடியரசுத் தலைவர் உரை நடைபெறும், அதே நாளில் நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இந்த பட்ஜெட்டில் அனைத்து தொழில்துறைகளுக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. ஏற்கனவே பல பிரச்சினைகளை சந்தித்து வரும் இந்திய ஆட்டோமொபைல் துறை பல புதிய அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்த்துள்ளது. ஆட்டோமொபைல் டீலர்களின் சங்கமான FADA, இந்த பிரிவில் தேவையை உருவாக்கும் வகையில், இரு சக்கர வாகனங்கள் மீதான GST விகிதங்களை 18%-மாகக் குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அதேபோல் இரு சக்கர வாகனங்கள் சாமானியர்களால் அன்றாட வேலைக்குப் பயன்படுத்தப்படுவதால் 28% GST மற்றும் ஆடம்பர பொருட்களுக்கான 2% செஸ் ஆகியவை இரு சக்கர வாகன வகைக்கு பொருந்தாது என்றும் FADA தெரிவித்துள்ளது.

பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் (Used Vehicles) 5% GSTயின் கீழ் கொண்டு வர FADA முயற்சி செய்கிறது. அவற்றிற்கு தற்போது 12% & 18% GST வரி விதிக்கப்படுகிறது.

மொத்தத்தில் 2022 பட்ஜெட்டில் ஆட்டோ தொழில்துறை எதிர்பார்க்கும் சில முக்கிய அம்சங்கள் இவை:

1) வருமான வரி செலுத்தும் தனிநபர்களுக்கு வாகனங்கள் மீது தேய்மானம் கோருவதன் பலன்களை அறிமுகப்படுத்துதல்

2) வாகனங்களுக்கான தேய்மான விகிதம்

3) தயாரிப்பு எண்ணிக்கையை அதிகரிக்க GST விகிதங்களை ஒழுங்குபடுத்துதல்

4) பயன்படுத்திய கார்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்களில் 5% குறைப்பு

5) ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ பாகங்களுக்கான PLI திட்டத்தில் திருத்தம்