நூல் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை குறித்து ஆலோசிக்க திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் திருப்பூர் பின்னலாடை மற்றும் சார்புடைய தொழில் அமைப்புகள், பல்வேறு வணிக அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் சில அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னலாடை தொழிலின் முக்கிய மூலப்பொருளாகிய நூல் விலை ஏற்றம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இந்த விலையேற்றத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் விலையை கட்டுப்படுத்தக்கோரியும் இம்மாதம் நவம்பர் 26ம் தேதி திருப்பூரில் கடையடைப்பு மற்றும் பின்னலாடை நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தம் செய்யவும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரும், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான.முத்துரத்தினம் அவர்கள் பேசும்போது – இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், நூல் மற்றும் பஞ்சு ஏற்றுமதிக்கு தடை செய்தல், இடைத்தரகர்களை ஆதரிக்காமல் இந்திய பருத்திக் கழகம் பருத்தியை நேரடியாக நூற்பாலைகளுக்கு வழங்குதல், தமிழ்நாடு பருத்தி கொள்முதல் கழகம் அமைத்தல், பின்னலாடை தொழில் துறைக்கு எனத் தனிவாரியம் அமைத்தல் போன்ற பல கோரிக்கைகளை மத்திய மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

கூட்ட ஆலோசனை முடிவின்படி நவம்பர் 26ம் தேதி திருப்பூரில் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் பின்னலாடை நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தம் ஆகியவை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது மாநகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.