ஆன்லைன் உணவு டெலிவெரியில் முக்கிய பெருநகரங்களில் மட்டுமே இருந்து வந்த சோமேட்டோ, ஸ்விக்கி போன்றவை இப்போது பல பாகங்களுக்கும் தனது கிளைகளை விரிவாக்கம் செய்துவிட்டது. இந்நிலையில் இத்துறையில் முதன்மை இடத்தில் இருக்கும் சோமேட்டோ நீண்ட காலமாக உணவகங்கள் உடன் கொண்டிருந்த பிரச்னையை தீர்க்கும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி கூட்டணி உணவகங்கள் சமைத்த உணவை அந்தந்த உணவகங்களே அவர்கள் வாடிக்கையாளருக்கு நேரடியாக டெலிவரி செய்துக்கொள்ள விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று கூறியுள்ளது.

இதுநாள் வரை சோமேட்டோ ஆன்லைன் தளத்தில் உணவு ஆர்டர் பெற்றாலும் கூட உணவகங்கள் சோமேட்டோ டெலிவரி பார்ட்னர் வாயிலாகத்தான் டெலிவரி கொடுக்க முடியும். தாமாக உணவை வாடிக்கையாளருக்கு டெலிவரி வழங்க முடியாது. இனி அந்நிலை மாறும் என்று சோமேட்டோ அறிவித்துள்ளதால் ஆன்லைன் உணவு டெலிவரி துறையில் உணவகங்களின் ஆதிக்கம் இனி சற்றே உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போதுமான அளவு டெலிவரி பார்ட்னர்கள் இல்லாத காரணத்தால் பல சூழ்நிலைகளில் உணவகங்கள் உரிய நேரத்தில் டெலிவரி கொடுக்கமுடியாமல் தங்கள் வர்த்தகத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டதாக தொடர்ந்து சோமேட்டோவிடம் குறை கூறிவந்தனர். இதை சரி செய்ய டெலிவரி சேவையில் ஹைப்ரிட் மாடல் அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனத்தில் துணைத்தலைவர் பர்வேஷ் பாண்டே தெரிவித்துள்ளார். அதே சமயம் ஆன்லைன் டெலிவரி சேவையில் உணவின் தரம் மற்றும் பேக்கிங் மிக முக்கிய பங்கு பெரும். அதுவே அதன் அடித்தளம். ஆகவே ஹைப்ரிட் மாடலை பயன்படுத்தும் உணவகங்கள் இந்த இரண்டு விஷயங்களை ஒருபோதும் கைவிடக்கூடாது என கூறியுள்ளார்.

2021-ல் 143% அதிகரித்துள்ள ஆன்லைன் ஆர்டர்கள்

ஆன்லைன் உணவு டெலிவரி சேவை அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் கூட 8% மக்கள் மட்டுமே இச்சேவையை உபயோகப்படுத்துகின்றனர் என்று புள்ளி விவரம் கூறுகிறது. மிகவும் அதிகமான வியாபார வாய்ப்புகள் இத்துறையில் இருப்பதால் சரியாக பயன்படுத்தும்போது இதன் வளர்ச்சி நன்கு அதிகரிக்கும் என்று தெரிகிறது. 2020-ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் சென்ற 2021-ல் ஆன்லைன் உணவு ஆர்டர்கள் செய்யப்பட்ட எண்ணிக்கை 143% அதிகமே.

பங்கு சந்தையை பொறுத்த வரையில் சோமேட்டோ & ஸ்விக்கி ஒப்பீடு

சோமேட்டோ நிறுவனம் வர்த்தகத்தை பொறுத்த வரையில் நல்ல வளர்ச்சி பெற்றிருந்தாலும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு தேவைப்படும் நம்பிக்கையை இன்னும் கொடுக்கவில்லை என்றே தெரிகிறது. சக போட்டி நிறுவனம் ஸ்விக்கி 100 மில்வியன் டாலர் வரை முதலீட்டைத் திரட்டி 10.7 பில்லியன் டாலர் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்விக்கி உணவு டெலிவரி மட்டும் அல்லாது தற்போது மளிகை பொருட்களையும் நேரடியாக டெலிவரி செய்து வருகிறது.