பங்கு சந்தை, மியூச்சுவல் பண்டு என்ற வரிசையில் அடுத்து நிற்பது கிரிப்டோகரன்சி. உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் விர்ச்சுவல் கரன்சி எனப்படும் இந்த கிரிப்டோ கரன்சி முதலீட்டில் தங்களை இணைத்துள்ளனர். இந்த கரன்சி முதலீடு பற்றும் முழுவதும் தெரிந்தும் தெரியாமலும் இதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளவர் பலர்.

இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு தடை, ஒழுங்குமுறை படுத்துதல் குறித்து சட்ட வரைவுரை, அரசு அறிமுகப்படுத்த இருக்கும் கிரிப்டோ கரன்சி மற்றும் அதற்குரிய வழிகாட்டுதல் போன்று பல்வேறு விவாதங்களுக்கும் உள்ளாகி வருகின்றது கிரிப்டோ கரன்சி. இருப்பினும் நாளுக்கு நாள் இதில் பணத்தை முதலீடு செய்வோர் எண்ணிக்கை கூடிக்கொண்டு தான் வருகிறது.

சில நாட்கள் ஏறு முகத்திலும் சில நாட்கள் வீழ்ச்சியையும் சந்தித்து வரும் இந்த விர்ச்சுவல் கரன்சிகளின் மதிப்பை பொறுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியையும், பதட்டத்தையும் மாறி மாறி அனுபவித்து வருகின்றனர். இருப்பினும் அதில் இணையும் புதிய மெம்பெர்ஸ் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கின்றது என்பதுதான் நிதர்சனம்.

சமீபத்தில் இந்த கிரிப்டோ கரன்சியின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இதனால் பதட்டத்தில் இதில் முதலீடு செய்துள்ளவர்கள் தங்கள் கரன்சிகளை விற்பனை செய்தும் வருகிறார்கள். ஏறக்குறைய ஒன்றரை கோடி பேர் பிட்காயின் உட்பட பல கிரிப்டோகரன்சிகளிலும் 10000 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் இருந்தன. இந்நிலையில் தற்போது தொடர் வீழ்ச்சி காணும் கிரிப்டோகரன்சிகளை அச்சத்தில் விரைந்து விற்பனை செய்தும் வருகின்றனர். 40 லட்சத்திலிருந்து 29 லட்சம் வரை பிட்காயின் மதிப்பு கீழிறங்கியதாக தகவல் வந்துள்ளது.

முதலீட்டாளர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. தேவையற்ற பதட்டத்தில் தங்கள் பிட்காயினை இப்போது விற்பனை செய்ய வேண்டாம் என்ற அறிவுரையையே இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு கிரிப்டோகரன்சி இணைப்பு செயலிகளும் முதலீட்டாளர்களுக்கு வழங்கி வருகின்றன. கூடிய விரைவில் நிலைமை சரியாகுமா? மீண்டும் ஏறுமுகம் காணுமா விர்ச்சுவல் கரன்சிகள்? தங்கள் பணம் பாதுகாப்புடன் இருக்குமா? இப்படி பல கேள்விகள் மனதில் எழ பதட்டத்தில் இருக்கும் முதலீட்டாளர்கள்.