பிறக்கவிருக்கும் 2022ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் GST விகிதம் அதிகரிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி அதிகரிப்பு இடம்பெறப்போவது ஆடைகள், செயற்கை நூல், துணிகள், டென்ட், மேஜை துணிகள், கம்பள விரிப்புகள், திரைசீலைகள், போர்வைகள் ஆகியவை உள்ளடங்கிய ஜவுளிப் பொருட்களுக்கு 5% லிருந்து 12% ஆக உயர்த்தப்பட உள்ளது என்று தெரிகிறது. இதனால் ஜனவரி 1, 2022லிருந்து ஆடைகள் மற்றும் காலணிகளின் விலையில் உயர்வு ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

காலணிகளுக்கான GST விகிதம் 5% முதல் 12% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ரூ.1,000 வரையிலான காலணிகளுக்கு பொருந்தும். இந்நிலையில் ஜவுளித்துறையும், பின்னலாடை துறையும் சந்தித்து வரும் இன்னல்கள் சிலவற்றை கவனிப்போம் –
1. நூல் உள்ளிட்ட மூலதனப் பொருட்கள் விலை அதிகரிப்பு
2. நூல் விலை கிலோவுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது
3. நூல் விலை உயர்வை தொடர்ந்து உள்நாட்டு பின்னலாடை விலை 20% வரை உயர்த்த சைமா முடிவு
4. பின்னலாடை சம்பந்தப்பட்ட உப தொழில்கள் கூலி கட்டணம் உயர்வு
5. பின்னலாடை தொழிலாளர்கள் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது
6. பின்னலாடை பொருட்கள் விலை 15% லிருந்து 20% வரை அதிகரிக்க முடிவு

இவ்வளவு இன்னல்கள் இந்த துறையில் இருக்கும்போது அதிகரிக்கவிருக்கும் GST வரி மேலும் கலக்கத்தையே கொடுத்துள்ளது. இன்னொரு பக்கம் பார்த்தால் செயற்கை இழைகள் மற்றும் நூல்களுக்கு GST விகிதங்கள் 18% லிருந்து 12% ஆக குறைந்துள்ளது. இதனால் ஜவுளித் துறையில் GST வரி விகிதம் என்பது ஒரே அளவில் தான் இருக்கும் என்றொரு கருத்தும் நிலவுகிறது.