நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையின்போது இந்தியாவுக்கென பிரத்தியேக கிரிப்டோகரன்சி உருவாக்கப்பட்டு நடப்பு ஆண்டிலேயே ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணத்தை அறிமுகம் செய்யும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்தியாவை பொறுத்த வரையில் கிரிப்டோ கரன்சிகள் பயன்பாடு அதிகரித்தபடி இருக்கிறது. முக்கியமாக பிட்காயின், எத்திரியம் ஆகியவற்றில் முதலீடு செய்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். அதேசமயம் கிரிப்டோகரன்ஸியை சட்டமுறையுடன் கூடிய பணமாக பயன்படுத்த இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளும் தயக்கம் காட்டியபடியே இருக்கின்றன. ஆகவே கிரிப்டோகரன்சிகள் முறைப்படுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்த சமயத்தில் இன்று பட்ஜெட் உரையின்போது பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் புதிய டிஜிட்டல் ரூபாய் இந்திய ரிசர்வ் வங்கியால் விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பொறுத்த வரை பரிவர்த்தனைகள் வெளிப்படையானவை. எந்த பதிவுகளையும் மாற்றம் செய்ய முடியாது. அதனாலேயே, இம்முறை கிரிப்டோகரன்சியில் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம், டிஜிட்டல் சொத்துகளை மாற்றுவதனால் கிடைக்கப்பெறும் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இது கிரிப்டோகரன்சி மற்றும் NFTகளின் ஆதாயங்களை பாதிக்கும் என்று தெரிகிறது.

சில விதிவிலக்குகளுடன், இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளையும் தடை செய்ய முற்படும் கிரிப்டோகரன்சிகள் குறித்த மசோதாவை அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் திட்டங்களுக்கு மத்தியில் வெளிவந்துள்ளது புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகம் / பிரத்தியேக கிரிப்டோகரன்சி அறிமுகம் என்கிற இந்த அறிவிப்பு.

ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்த இருக்கும் டிஜிட்டல் நாணயம் (CBDC) என்பது அரசாங்கம் வெளியிடும் மாற்று இல்லாத நாணயத்தின் டிஜிட்டல் வடிவம். இதன்மூலம் பிளாக்செயின் ஆதரவுடன் பணத்தைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யமுடியும். இதன் கட்டுப்பாடு முழுவதும் மத்திய ரிசர்வ் வங்கியிடம் உள்ளது.