பல்வேறு செயல் திட்டங்கள், மூன்றரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, 4500 கோடி ரூபாய்க்கு தொழில் முதலீடுகள் போன்ற பல்வேறு அசத்தல் ஐடியாவுடன் 1150 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கிறது ஒரு மிகப்பெரிய பர்னிச்சர் பூங்கா. இந்தியாவிலேயே முதல் பர்னிச்சர் பூங்கா என்னும் பெருமையை பெறவிருக்கும் இந்த தொழில் பூங்கா தூத்துக்குடி மாவட்டத்தில் அமையவிருக்கிறது. இதன் அடிக்கல் நாட்டு விழா இம்மாதம் 11ம் தேதி தமிழக முதலமைச்சரால் நடைபெற உள்ளது.

கட்டமைப்பில் தன்னிறைவு பபெற்ற தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய போக்குவரத்து கட்டமைப்புகளான துறைமுகம், விமான நிலையம், ரயில் நிலையம் என அனைத்து வசதிகளும் இருப்பதால் இம்மாவட்டத்தில் முதலீடு செய்வதில் பல்வேறு தொழில் நிறுவனங்களும் ஆர்வமுடன் முன்வருகின்றனர்.

பர்னிச்சர் பூங்காவின் முக்கிய அம்சங்கள்

அது சரி, இங்கு பர்னிச்சர் சம்பந்தப்பட்ட என்னென்ன நிறுவனங்கள் அமைய இருக்கிறது? மர அரவை ஆலை, ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள், பர்னிச்சர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், பேக்கிங் நிறுவனங்கள் என 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இங்கு வரவிருக்கின்றன. இந்தியாவின் முதல் பர்னிச்சர் பூங்கா பன்முக சிறப்பம்சங்களை பெற்றுள்ளதால் 4500 கோடி ரூபாய்க்கும் மேல் தொழில் முதலீடுகள் பெற திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் வட்டம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கிடைக்கும் ரப்பர், யூகலிப்டஸ், மலை வேம்பு, சில்வர் ஓக் ஆகிய மரங்களை பயன்படுத்தி பர்னிச்சர்கள் வடிவமைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

புதிய வேலை வாய்ப்புகள், பயிற்சி கூடங்கள் உருவாகும்

இங்கு பல நூறு புதிய நிறுவனங்கள் அமைய இருப்பதால் மூன்றரை லட்சத்துக்கும் மேல் வேலை வாய்ப்புகளும் உருவாகும் வாய்ப்புள்ளது. மேலும், பர்னிச்சர் தொழில் குறித்து பல்வேறு பணியாற்றுவதற்கு 5000 பேருக்கு பயிற்சி அளிக்கும் விதத்தில் பயிற்சி கூடம், தரம் பரிசோதிக்க ஆய்வுக்கூடம், தாங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், வீடியோ கான்பரன்சிங் வசதி என்று பல்வேறு நவீன தர கட்டமைப்புகளும் அமையவுள்ளது.

இந்த பூங்கா அமைக்க ஆரம்ப கட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில் இம்மாதம் 11ம் தேதி தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெறுகிறது.