கவனிக்க வேண்டிய விஷயங்கள்

முதலில் கவனிக்க வேண்டியது சைபர் க்ரைம் சம்பவம் நடந்து 72 மணி நேரத்துக்குள் (3 நாட்களுக்குள்) உரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தால் துரிதமாக நடவடிக்கை எடுக்கமுடியும்.

சைபர் குற்றங்களில் பரவல்

சைபர் குற்றங்கள் எப்போதுமே மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது. தனி மனிதர், நிறுவனங்கள், அதிகார அமைப்பு என்று எங்கும் தன் கரங்களை நீட்டும் சைபர் குற்றங்களிலிருந்து ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் இருப்பது இந்நாளில் அவசியம். கொரோனா காலகட்டத்திற்கு பின் இக்குற்றங்கள் நாடெங்கிலும் அதிகரித்தே காணப்படுகிறது. தமிழகம் இந்த குற்ற அளவுகளில் தற்போது 12ம் இடத்தில் உள்ளது.

அவசியம் தேவைப்படும் பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

பாதுகாப்பு நடவடிக்கைக்களை அரசு எடுத்தால் மட்டும் போதாது, ஒவ்வொரு தனி நபரும் இதில் தம்மை தாமே காத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இதற்காக பல விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று எத்திக்கல் ஹேக்கர் மகேஷ் பாஸ்கரன் அறிவுறுத்துகிறார். மக்கள் அதிகமாக கூடும் பல இடங்களில் கிடைக்கும் Open / Free வைஃபை (Wifi) சேவையை தவிர்த்தல் நல்லது. தேவையற்று நமக்கு வரும் போலி SMS-களை நம்பி ஏமாந்து நம் வங்கி கணக்கு எண், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்கள் ஆகியவற்றை எவருக்கும் பகிர்தல் கூடாது, ATM கார்டு மற்றும் நெட்பாங்கிங் குறியீட்டு எண்களை அடிக்கடி மாற்றுதல் அவசியம், அறிமுகமில்லாத இடத்திலிருந்தோ, இணைய தளத்திலிருந்தோ வரும் லிங்க், புகைப்படம், வீடியோ, ஸ்பேம் மின்னஞ்சல்கள் (Spam Email) போன்றவற்றை அனுமதிக்க கூடாது, சமூகவலைத்தளங்கள் எதிலும் தனிப்பட்ட தகவல்களை பகிர்தல் கூடாது, கைபேசி, கணினி ஆகியவற்றை கடவுச்சொல் கொண்டு பாதுகாப்பாக வைத்திருக்கலாம், Special Characters எனப்படும் !, @, &, %, + போன்றவற்றை கடவுச்சொல்லில் சேர்ப்பதன் மூலம் உங்கள் கணக்கு திருடப்படுவதை தவிர்க்கலாம், ஒரே கடவுச்சொல்லை வெவ்வேறு தளங்களுக்கு பயன்படுத்தக்கூடாது.

இவை தவிர, குழந்தைகளிடமிருந்து பாதுகாப்பது, தேவையற்ற இணையதளங்களை பார்வையிடுவது, பதிவிறக்கம் செய்வது, ஆன்டி-வைரஸ் போன்ற கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளால் நம்மை சைபர் திருட்டுகளிடமிருந்து பாதுகாத்துக்க முடியும் என்று மகேஷ் பாஸ்கரன் கூறுகிறார்.

நீங்கள் சைபர் புகார் அளிக்கவேண்டுமா?

சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர் யாரும் அது குறித்து புகார் தெரிவிக்க அச்சப்பட தேவையில்லை. ஒருவர் வங்கி கணக்கிலிருந்து பணம் மோசடி செய்யப்பட்டிருந்தால் உடனே `National Cyber Crime Helpline – 155260′ புகார் தெரிவிக்கலாம். அதுவும் 24 மணி நேரத்துக்குள் புகார் அளித்தால், மோசடி நபரின் வங்கிக் கணக்குக்குச் செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்காதவாறு முடக்கலாம் என சைபர் கிரைம் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இக்குற்றங்கள் சம்பந்தமாக காவல் நிலையத்துக்கு www.cybercrime.gov.in என்ற வலைத்தளத்திலேயே கூட புகார் அளிக்கலாம்.

இந்த விபரங்களை வெறும் செய்தியாக மட்டும் படிக்காமல் சுயமாக செய்து பார்க்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் இன்று கைபேசி, தொலைக்காட்சி, செய்தித்தாள் ஆகியவற்றில் நாம் பார்க்கும், கேட்கும் விஷயங்கள் நாளை ஒரு நாள் நமக்கே கூட ஏற்படலாம். ஆகவே நம்மை நாம் காத்து கொள்ளுதல் அவசியம்.