வெள்ளை நிற சர்க்கரை ரசாயனங்கள் கலக்கப்பட்டு பல பிராசசிங் முறைகளை கடந்து வருகிறது என்ற செய்தி சில ஆண்டுகளாகவே மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருவது. ஏறக்குறைய அனைவரும் வெள்ளை சர்க்கரை உபயோகத்தை குறைத்து நம் பாரம்பரிய வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை உபயோகிக்க தொடங்கி விட்டனர். இதனால் புதிது புதிதாக பலரும் வெல்லம், நாட்டுச்சர்க்கரை ஆகியவை தயாரிக்கும் ஆலைகளை நிறுவி வருகின்றனர்.

வெல்லம் , நாட்டுச்சர்க்கரை தயாரிப்பு & பாதுகாப்பு விதிமுறைகள்

உணவுப்பொருட்கள் தயாரிக்கும் இடங்கள் பொதுவாக சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருத்தல் அவசியம். பூச்சிகள், எலி, ஈ, கரப்பான் போன்றவை இல்லாமல் கவனமுடன் பாதுகாக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் முறையே உணவு பாதுகாப்பு தரச்சட்டம் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுவதோடு, உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் மற்றும் பதிவுசான்றை பெற்று இருத்தல் அவசியம். அதேபோல் வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை பேக்கிங் மீது தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி, உரிம எண், முழு முகவரி மற்றும் சைவ குறியீடு ஆகியவை அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.

இந்த பணியில் ஈடுபடுத்தப்படும் பணியாளர்களுக்கு ஆலை உரிமையாளர்கள் தலையுறை, கையுறை, காலுறை போன்ற பாதுகாப்பு அணிகளை வழங்குதல் அவசியம் என்று உணவு பாதுகாப்புதுறை உத்தரவிட்டுள்ளது. மேலும் எக்காரணம் கொண்டும் வெள்ளை சர்க்கரை மற்றும் ரசாயன கலப்பு இருக்க கூடாது. வேதிப்பொருள்களையோ, மைதா, சர்க்கரை போன்ற பொருள்களை கலப்பதோ தவிர்க்கபடவேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். விதிமுறைகளை மீறும் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

வேலூர் மாவட்டத்தில் 3 குழுக்களாக ஆய்வு நடத்தும் அதிகாரிகள்

மேற்கூறப்பட்ட விதிமுறைகள் அனைத்தும் தவறாமல் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் 3 குழுக்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் அவர்கள் தலைமையில் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள்.

வெல்லம் தயாரிப்பில் வெல்லத்தை வெள்ளை நிறமாக்குவதற்கு சோடியம் பை சல்பேட், கால்சியம் கார்பனேட், சல்பர் டை ஆக்சைடு, சூப்பர் பாஸ்பேட் போன்ற வேதியியல் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கவசம்பட்டு, கந்தனேரி ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.