பெண்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையச் செய்தல் நாட்டின் பல முன்னேற்றங்களுக்கு அடித்தளமிடும் என்பதில் தமிழக அரசு மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்த முதல் நாளிலிருந்தே பல நலத்திட்ட உதவிகள் மகளிருக்கான செய்யப்பட்டு வருகின்றன. நகரபெருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி, கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி, பேறுகால விடுமுறை நாட்கள் உயர்வு இப்படி பல சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது.

சுய உதவி கடன் தள்ளுபடி மற்றும் புதிய நிதியுதவிகள்

இந்நிலையில், குடும்ப சூழலை முன்னேற்றப் பாதையில் எடுத்துச்செல்வதில் பெண்களுக்கு உற்ற துணையாக இருப்பது மகளிர் சுயஉதவி குழு. 31 மார்ச் 2021 வரை நிலுவையில் உள்ள மகளிர் சுயஉதவி குழுவினர் கடன் தொகை ரூ.2756 கோடி ரத்து செய்யப்படுவதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளிவந்தது. இதையடுத்து இந்த குழுக்களுக்கு ரூ.3000 கோடி கடன் உதவி வழங்கும் திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், டிசம்பர் 14 அன்று நடைபெறும் நிகழ்வில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்த ஆண்டில் முதல் கட்டமாக ரூ.600 கோடியும், மீதித்தொகை 7% வட்டியுடன் அடுத்த 4 ஆண்டுகளில் நிபந்தனையுடன் விடுவிக்கவும் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது தவிர பயனாளிகளுக்கு பல நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்குகிறார்.