பிரிட்டன் நாட்டின் ராணி எலிசபெத்தின் ‘வின்ட்ஸ்டர் காஸ்டில்’ என்ற அரண்மனையில் தூய்மை பணியாளருக்கான தேர்வு தற்போது நடைபெற உள்ளதாக இணையதளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

பிரிட்டன் ராணி எலிசபெத் அவர்களின் அரண்மனையில் தூய்மைப் பணி, பராமரிப்பு பணி போன்றவற்றை செய்ய பணி ஆட்கள் தேர்வானது தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 13 மாத காலம் பயிற்சியும் கொடுக்கப்பட்டு, பின்னர் முழு நேரப் பணி ஆட்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த தூய்மை பணிக்குத் தேர்வு செய்யப்படும் நபர்கள் ‘வின்ட்சர் காஸ்டில்’ அரண்மனையில் மட்டுமின்றி பக்கிங்காமில் உள்ள அரண்மனை உட்பட சில அரண்மனையிலும் பணி நியமனம் செய்யப்படுவார்கள். அதாவது, ஒரு ஆண்டில் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு அரண்மனைகளிலும் பணியாற்றும் விதமாக அவர்களின் பணி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பானது நிரந்தர பணி ஆகும். மேலும், இதற்கு ஆங்கிலம் மற்றும் கணிதம் நன்கு கற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், ஒரு வேளை தேவையான கல்வித் தகுதி இல்லாமல் இருந்தால் பணியாளர்களுக்கு 13 கால பயிற்சி சமயத்தில் தேவையான கல்விப் பயிற்சியும் அளித்து பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த அரண்மனை பணியில் தேர்வு செய்யப்படுவோரர்கள் அரண்மனையிலேயே வசிப்பதோடு, ஒரு ஆண்டுக்கு 33 நாட்கள் விடுமுறையும் பெற்று, உணவுப்படி, ஓய்வூதியம், போக்குவரத்து செலவு உள்ளிட்டவைகளையும் பெறலாம். அதுமட்டுமின்றி, வாரத்தின் ஐந்து நாட்கள் மட்டும் தான் பணி நாள். இதற்காக அவர்கள் பெறவுள்ள தொடக்க சம்பளம் 18.5 லட்சம் ரூபாய் ஆகும்.

மேலும், இப்பணிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 28-ம் தேதி தான் கடைசி நாள் ஆகும். இதற்கான நேர்முகத் தேர்வானது நவம்பர் 2-ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

Author – Gurusanjeev Sivakumar