நிலம் பண்படுத்துதல் – நடவு நடுதல் – களை அகற்றுதல் – பூச்சிகளின் தாக்கத்திலிருந்து பயிரை காப்பாற்றுதல் – அறுவடை – ஆட்கூலி – பதப்படுத்துதல் – சந்தைப்படுத்துதல் – இடைத்தரகர் கமிஷன் – மண்டி கமிஷன் என ஒரு விவசாயி தனது உற்பத்தியிலிருந்து லாபம் பார்க்க பல இடர்களை தாண்டி வரவேண்டியுள்ளது. இதில் ஒவ்வொரு நிலையும் ஒரு சவால் தான். இதற்கிடையில் இயற்கை இடர்பாடுகள் புயல், மழை, வெள்ளம் என அதையும் அவர்கள் சமாளிக்க வேண்டியுள்ளது. சமீபத்தில் பெய்துள்ள கனமழை தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் விவசாய நிலங்களை சூறையாடியுள்ளது.

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை நேரில் பார்வையிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் மற்றும் பயிர் சேதத்திற்கு, ரூ.300 கோடி அரசு வழங்கும் என அறிவித்துள்ளார். ஆகவே அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் பயிர்களை முறையாக கணக்கெடுத்து அரசுக்கு சமர்ப்பித்தல் தான் உரிய இழப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு கிடைக்கும்.

இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையால் காஞ்சீபுரம் (2887.43 ஏக்கர்) மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் (2368.73 ஏக்கர்) நெற்பயிர்கள் பெருத்த சேதத்தை அடைந்துள்ளன. பாதிப்படைந்த இம்மாவட்டங்களில் சேதம் அடைந்த நெற்பயிர்களின் விபரங்களை கணக்கெடுத்த வேளாண்துறை அதை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதன்படியே விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். ஆனால் அது சரிவர கணக்கெடுக்கப்படாத அறிக்கை என்று தமிழ்நாடு விவசாய சங்கத்தின் காஞ்சீபுரம் மாவட்ட செயலர் கே.நேரு கூறுகிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை, வேளாண் துறையினர் முறையாக கணக்கெடுக்க வேண்டும். நெல்விளைவிக்கப்பட்ட விவசாய நிலங்களை அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர் நிலங்கள்; நீரில் மூழ்கிய இளம் நெற்பயிர்; நெல் முதிர்வு பெறவிருக்கும் நிலையில் இருந்த நெற்பயிர் என, தரம்பிரித்து கணக்கெடுக்க வேண்டும். அதற்கு ஏற்ப நிவாரணம் வழங்கினால் தான் விவசாயிகள் பாதிப்படையாமல் இருப்பார்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் முதல்வர் அறிவித்துள்ள நிவாரணம், விவசாயிகளுக்கு போதாது. அதை உயர்த்தி தர வேண்டும் என்றும் கூறுகிறார்.

முதல்வர் அறிவிப்பின்படி – அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை சொர்ணவாரி பயிர் முழுமையாக சேதமடைந்த இடங்களில், விவசாயிகளுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.8,000 நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கிய சேதமடைந்த பயிர்களை, மறு சாகுபடி செய்ய வசதியாக, ஏக்கருக்கு ரூ.2,443 மதிப்பில் விதை, நுண்ணுாட்ட கலவை, யூரியா, டி.ஏ.பி., ஆகிய வேளாண் இடுபொருட்கள் ஆகியவை வழங்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.