சென்ற வார கடைசியில் முக்கிய ஊடக தளங்களில் ஒன்றான Twitter-ன் பாதுகாப்பு தடைகளையும் மீறி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களது twitter கணக்கை ஹேக் செய்து சில புத்திசாலிகள் ஒரு Twitter பதிவை செய்தனர். சுமார் 73 மில்லியன் followers-ஐ கொண்டிருக்கும் நாட்டின் முக்கிய தலைவரது அக்கௌன்ட் ஹேக் செய்யப்பட்டது சைபர் கிரைம் துறையினருக்கு அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அந்த டீவீட்டில் “இந்திய அரசு பிட்காயினை அங்கீகரிப்பதாகவும் 500 பிட்காயின்கள் அரசால் வாங்கப்பட்டு அவை நாட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாகவும்” அதில் அறிவிக்கப்பட்டது.

இந்த ட்வீட் அதிகாலை 3.18 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் தெரிந்தவுடன் அவருடைய கணக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு, இதுபோன்ற பதிவுகள் ஏதேனும் அவருடைய கணக்கிலிருந்து பகிரப்பட்டிருந்தால் அதை தவிர்க்கவும் என்று தெரிவிக்கப்பட்டது.

முந்தய ஆண்டில் ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் கணக்குகள்…தொடரும் பாதிப்பு

ஜூலை 2020-லும் இதே போன்று 100க்கும் மேற்பட்ட முக்கிய நபர்களின் கணக்குகள் அத்துமீறி ஹேக் செய்யப்பட்டது. பாரக் ஒபாமா, ஜோ பைடன், பில் கேட்ஸ், எலன் மஸ்க், கேன்யி வெஸ்ட், ஆப்பிள் inc ஆகியவை அதில் அடங்கும்.

விசாரணை வளையம் அமைக்கப்பட்டதா?

இச்சம்பவம் குறித்து அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். நாட்டின் இணைய பாதுகாப்பு நோடல் ஏஜென்சியான CERT – யும் இதனை விசாரிக்க களமிறங்கியுள்ளது. சைபர் பாதுகாப்பு பிரிவு மற்றும் பிற ஏஜென்சிகளின் அதிகாரிகள் ட்விட்டரிடமிருந்து அனைத்து விவரங்களைக் கேட்டுள்ளனர், அதே நேரத்தில் சுதந்திரமான நிறுவனங்களாக செயல்படும் அல்லது இந்தியாவின் நலன்களுக்கு விரோதமான நாடுகளில் இருந்து வெளிவரும் ஹேக்கிங் சிண்டிகேட்டுகள் மற்றும் குழுக்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அச்சத்தை உண்டுபண்ணியுள்ள சமூக ஊடக ஹேக்குகள்

ஒவ்வொரு முறை இது போன்ற பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் மற்றும் பிற ஊடக தளங்கள் ஹேக் செய்யப்படும்போதும், அவற்றின் பாதுகாப்பின் மீது நம்பிக்கையற்ற தன்மை எழுவதை காட்டிலும் இது பல மோசமான பாதிப்புகளை சமூகத்தில் மற்றவர்களுக்கும் ஏற்படுத்த தயங்காது என்றே கொள்ளலாம். துரதிஷ்டவசமாக இது போன்ற சம்பவங்களால் ட்விட்டர் அதன் அடிப்படை பணியான “பாதுகாப்பான உபயோகம்” என்ற செயல்பாட்டை தவறவிடுகிறது. யாராவது ஒருவர் தீவிரமாக காயப்படும் வரை இதுபோன்ற அத்துமீறல்கள் ஒரு வேளை விளையாட்டாக கூட எடுத்துக்கொள்ளப்படலாம் ஆனால் ஹேக்கர்ஸ் கவனிக்கவும், ஊடக அத்துமீறல் முற்றிலும் தவறானது.