பின்னலாடை தொழிலை பொறுத்த வரையில் நிலை மாறாத கவலையாக அவர்களை தொடர்ந்து துரத்தி வருவது நூல் விலை உயர்வு. பஞ்சு இறக்குமதிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் பஞ்சு நூல் தயாரிப்பு மில்கள் பலவும் நூல் விலையை ஏற்கனவே அதிகப்படுத்தி உள்ளன. 2020-ம் ஆண்டிலிருந்த விலையை காட்டிலும் தற்போது 50% அளவுக்கு நூல் விலை ஏறியுள்ளது. இது பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு உற்பத்தி ஆடைகளை சப்ளை செய்ய முடிவதில்லை. இதனால் இறுதியில் உற்பத்தி நிறுவனங்கள் பலவும் சந்திப்பது என்னவோ நஷ்டம் தான். முக்கியமாக வெளிநாட்டு ஆர்டர்களில் தான் அதிக இக்கட்டான நிலை ஏற்படுகிறது.

பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அது சார்புடைய நிறுவனங்கள் பலவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். ஆனால் அந்த கோரிக்கைகள் குறித்து எந்த தாக்கமும் தற்போது வெளியாகியுள்ள பட்ஜெட்டில் இல்லை. இன்னும் சொல்ல போனால் நூல் விலை மீண்டும் 10 ரூபாய் விலை உயர்ந்து, இப்போது ஒரு கிலோ நூல் 340-லிருந்து 390 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

நாம் ஆர்டர் பெற முடியாத பட்சத்தில் வர்த்தகத்தில் நம்முடன் போட்டியிலுள்ள சீனா, வியட்னாம், கம்போடியா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகள் ஆர்டர்களை அதிகம் பெரும் வாய்ப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இது நமது ஏற்றுமதி வர்த்தகத்தை பாதிக்கும் எனத்தெரிகிறது. நூல் விலை உயர்வினால் பாதிக்கப்படுவது பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்ல அதை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் கூட.