சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் வெளியிட்ட பட்ஜெட்டில் பஞ்சு விலை கட்டுப்பாடு குறித்தும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை சார்ந்த பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்த பல கோரிக்கைகள் குறித்தும் எந்த ஒரு அறிவிப்பும் இடம்பெறவில்லை. இது அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பஞ்சு விலை ஏற்றத்தால் தொழில் முடங்கும் அபாயம்

மேலும் பட்ஜெட்டுக்கு பிறகு பஞ்சு விலை மீண்டும் ஏறிவிட்டது பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு இன்னும் கவலையை அதிகப்படுத்தியுள்ளது. பஞ்சு கொள்முதல் விலை ஒரு கேண்டி அதாவது 356 கிலோவின் விலை ரூபாய் 80000 என்று உச்சத்தை அடைந்துள்ளது. இப்படியே மாதம் தோறும் விலை உயர்ந்து வந்தால் தொழில் முடங்கும் அபாயம் அதிகரிக்கும்.

காணொளி வாயிலாக அமைச்சர் பியூஸ் கோயலுடன் சந்திக்க ஜவுளி சங்கங்களுக்கு அழைப்பு

இந்நிலையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களை நேரில் சந்தித்து இந்த விஷயம் தொடர்பாக உரையாடுவதற்கு வாய்ப்பை திருப்பூர் பின்னலாடை துறையினர் எதிர்பார்த்திருந்தனர். இதை தொடர்ந்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், கோவை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) உள்ளிட்ட தமிழக ஜவுளித்துறையினருக்கு வரும் 7ம் தேதி காணொளி வாயிலாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் கலந்துரையாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பிற்கு பிறகு ஜவுளித்துறை உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கும் பல்வேறு முக்கிய கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைத்தால் தொழில் நலிவடையாமல் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.