மாநிலத்தில் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும், உள்நாட்டு மற்றும் உலகளாவிய வணிக சமூகங்களுக்கு முதலீட்டாளர் நட்பு சூழ்நிலையை உருவாக்குவதற்கு வேண்டி இயற்றப்பட்ட சட்டம் தமிழ்நாடு அரசு வணிக வசதி சட்டம், 2018.

தொழில்துறையில் புதுமையான சுற்றுச்சூழல் வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட அமைப்பே டான்சிம் (TAmil Nadu Startup and Innovation Mission). இந்த அமைப்பின் முக்கிய செயல்பாடுகள் புதுமையை ஏற்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் முதலீடுகளை ஊக்குவித்தல், உள்கட்டமைப்புக்கு துணையாக இருப்பது, அறிவு உருவாக்கம், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் திறமையான மனிதவளம் ஆகியவற்றின் மூலம் நாட்டில் விவசாயம், உற்பத்தி, சுகாதாரம், கல்வி, தளவாடங்கள், சமூகத் துறை போன்ற துறைகளில் உயர் வளர்ச்சி காணச்செய்தல். ஆகவே இவற்றிற்கெல்லாம் ஆணிவேராக இருக்கும் புது தொழில் முனைவோர் மற்றும் புதுமையை புகுத்த எண்ணும் நிறுவனங்களுக்கு இந்த அமைப்பு ஆதரவு .அளிக்கிறது.

‘டான்சீடு’ எனும் தமிழ்நாடு புத்தொழில் ஆதார மானிய உதவித் திட்டம்

நாட்டிலுள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு, டான்சிம் சார்பில் ‘டான்சீடு’ எனும் தமிழ்நாடு புத்தொழில் ஆதார மானிய உதவித் திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் புத்தொழில்முனைவோர், தங்கள் நிறுவனத்தின் துவக்கநிலையை நல்லமுறையில் வடிவமைக்க ரூ.10 லட்சம் வரை டான்சிம் நிறுவனம் மானிய உதவியாக வழங்குகிறது.

19 புத்தொழில் நிறுவனங்கள் உயர்நிலை நிபுணர் குழுவால் தேர்வு

2021-22 நிதியாண்டில் மானியம் பெறுவதற்காக புத்தொழில் நிறுவனங்களிடமிருந்து 640 விண்ணப்பங்கள் இணையம் மூலம் பெறப்பட்டது. அதில் 19 புத்தொழில் நிறுவனங்கள் ரூ.10 லட்சம் வரை மானியம் பெறுவதற்கு மதிப்புடையன என்று உயர்நிலை நிபுணர் குழுவால் தேர்வு செய்யப்பட்டது. அவற்றிற்கு முதல் தவணையாக தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.95 லட்சத்துக்கான காசோலைகளை தமிழக முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது MSME துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலர் இறையன்பு, துறை செயலர் வி.அருண்ராய், டான்சிம் இயக்கக இயக்குநர் சி.ஜி தாமஸ் வைத்யன், தொழில் வணிக கூடுதல் இயக்குநர் ஏகாம்பரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.