உலகமே கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரச் சீரழிவைச் சந்தித்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதமும் சீனாவில் ஏற்றுமதி தொடர்ச்சியாக 3வது மாதமாக அதிகரித்துள்ளது. உலகின் 2வது பெரிய பொருளாதாரமான சீனாவில் இந்த ஏற்றுமதி கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது

சீனாவில் ஏற்றுமதி அதிகரிப்பு:

கடந்த ஆண்டு ஆகஸ்டைக் காட்டிலும் இந்த ஆகஸ்டில் ஏற்றுமதி 9.5% அதிகரித்துள்ளது. மார்ச் 2019-லிருந்து வலுவான ஏற்றுமதியாகும் இது. மேலும் 7.1% வளர்ச்சி என்ற ஆய்வாளர்களின் கணிப்பையும் முறியடித்து ஜூலையில் 7.2% வளர்ச்சி கண்டுள்ளது.

ஆனால் இறக்குமதி 2.1% சரிவை கண்டுள்ளன. ஏற்றுமதி அதிகரிப்பால் சீனப் பொருளாதாரம் சமச்சீரான வளர்ச்சி கண்டு வருகிறது. முதல் காலாண்டில் கடும் வீழ்ச்சிக்குப் பின்னர் சீன அரசு பொருளாதாரத்தில் நிதியை இறக்கி நிறைய சலுகைகளை அறிவித்தது.

இது தொடர்பாக ஆக்ஸ்பர்ட் எகனாமிக்ஸைச் சேர்ந்த லூயிஸ் குய்ஜ் கூறும்போது, “சீன ஏற்றுமதிகள் தொடர்ச்சியாக எதிர்மறைக் கணிப்புகளை முறியடித்து வருகிறது. உலக வர்த்தகத்தை விடவும் வேகமாக வளர்ச்சி காண்கிறது” என்றார். இதனால் உலகச் சந்தையில் சீனா தன்னுடைய வருவாய்ப் பங்கை அதிகரித்துள்ளது.

பெரும்பாலும் மருத்துவப் பொருள் ஏற்றுமதி மற்றும் உலகம் முழுதும் மின்னணுப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் தேவை காரணமாக சீனாவின் மின்னணுப்பொருட்கள் ஏற்றுமதியும் கடுமையாக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவுடனான சீனாவின் வர்த்தக உபரி மேலும் அதிகரித்து 34.24 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

Author – Gurusanjeev Sivakumar