அடுத்த ஆண்டிலிருந்து வருமான வரி படிவத்தில் கிரிப்டோகாரன்சி மூலம் ஈட்டிய வருமானம் மற்றும் லாபத்தை குறிப்பிட தனி காலம் கொடுக்கப்படும் என்று வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளார். குதிரை பந்தயம் மற்றும் பிற ஊகப்பரிவர்தனைகள் மீது அரசாங்கம் வசூல் செய்யும் செஸ் மற்றும் பிற வரிகள் போன்றே ஏப்ரல் 1ம் தேதி மூலம் 30% வரியை கிரிப்டோகாரன்சி மூலம் ஈட்டும் வருவாய்க்கும் வரி விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

50 லட்சத்திற்கு மேல் உள்ள வருமானத்திற்கு 30% வரி

அடுத்த ஆண்டு முதல் கிரிப்டோகரன்சி மூலம் ஐம்பது லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டப்பட்டால் அந்த வருமானத்தின் மீது 30% பொருந்தக்கூடிய செஸ் மற்றும் 15% சர்சார்ஜ் ஆகியவை விதிக்கப்படும். கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை அரசாங்கம் உருவாக்கி வருகிறது, ஆனால் இதுவரை எந்த வரைவையும் பகிரங்கமாக வெளியிடவில்லை.

இதற்கிடையில், மத்திய வங்கி ஆதரவு டிஜிட்டல் கரன்சி அடுத்த நிதியாண்டில் புழக்கத்திற்கு தயாராகும் என்று தெரிகிறது. இந்த புது டிஜிட்டல் கரன்சி மலிவானதாகவும், கரன்சி மேலாண்மையில் திறம்படவும் செயலாற்றும் என்று கூறப்படுகிறது. கடந்த செவ்வாயன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின்போது அடுத்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி புதிய டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தும், ஏப்ரல் 1ம் தேதி முதல் கிரிப்டோகரன்சி உள்ளிட்ட டிஜிட்டல் சொத்துக்கள், NFT சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகள் மீது 30% வரி வசூல் செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

“கிரிப்டோ போன்ற சொத்துக்களின் மீது வரி வசூல் செய்யப்படவேண்டும் என்பதில் அரசாங்கம் தெளிவாக இருந்தது. ஆகவேதான் அதிகபட்ச வரியாக 30% செஸ், பொருந்தக்கூடிய சர்சார்ஜ், 1% TDS ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் டிஜிட்டல் சொத்து பரிவர்த்தனைகள் சரியானபடி கண்காணிக்கப்படும்” என்றும் கூறியுள்ளார் தருண் பஜாஜ்.

1% TDS தொடர்பான விதிமுறைகள் இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்குவரும் என்றும் ஆதாயங்கள் மீது விதிக்கப்படும் வரியானது ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

செலவு மற்றும் கொடுப்பனவுகளுக்கு விலக்குகள் கிடையாது

மேலும், இத்தகைய டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும் பரிவர்த்தனைகளால் கிடைக்கப்பெறும் வருமானத்தை கணக்கிடும்போது எந்தவொரு செலவு மற்றும் கொடுப்பனவுகள் மீது விலக்குகள் அனுமதிக்கப்படாது. மேலும் விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துக்களை மாற்றும் போது ஏற்படும் இழப்புகள் எதுவும் வேறு எந்த வருமானத்திற்கும் சரியான எதிரீடாக அமைக்க அனுமதியில்லை என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.