கிரிப்டோகரன்சி மசோதா

நவம்பர் 23ம் தேதி மத்திய அரசு பல்வேறு தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கும் தடை விதிக்க இருப்பதாகவும் “The Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill 2021” என்ற மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரில் சமர்ப்பிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன. பாரத பிரதமர் மற்றும் ரிசர்வ் வங்கி இருவருமே கிரிப்டோகரன்சிகள் வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாய் அமையும் என்ற கருத்தை முன் வைக்கின்றனர். மேலும் ஏப்ரல் 2020-ல் USD 923 மில்லியனாக இருந்த இந்திய டிஜிட்டல் கரன்சி சந்தை மதிப்பு ஏப்ரல் 2021ல் USD 6.6 பில்லியனாக அதிகரித்திருந்ததை நிபுணர்கள்
குறிப்பிட்டனர்.

கிரிப்டோகரன்சி மோகத்தில் சிக்கும் மேல், நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்கள்

RBI கவர்னர் ஷக்திகாந்த தாஸ் நாடு முழுவதும் கிரிப்டோ கரன்சி வைத்திருப்பவர்கள் எண்ணிக்கையை பற்றி கூறும்போது 70-80% உபயோகிப்பாளர்கள் வெறும் ரூ.500லிருந்து 1000 வரை மட்டுமே தங்கள் கணக்கில் இருப்பு நிலை உடையவர்களாக உள்ளனர் என்கிறார். மேலும் இது போன்ற கரன்சிகள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமையின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு விளைவிக்கும் என்று எச்சரிக்கை விதித்துள்ளார்.

கிரிப்டோகரன்சி

கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற சந்திப்பின் போது இது குறித்து தீவிர விவாதம் நடத்தப்பட்டது. அப்போது மிக அதிக லாபம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி கடந்த 18 மாதங்களில் அதிக அளவில் மேல் தட்டு மற்றும் நடுத்தர மக்கள் கிரிப்டோ வர்த்தகத்தில் நுழைந்துள்ளனர். இதுமட்டுமல்லாது வசதி குறைந்த கீழ்த்தட்டு மக்களையும் இந்த விளம்பரங்கள் கவர்த்துள்ளது. கிரிப்டோ கரன்சிகள் மிக அதிக அளவு லாபம் தருபவை என்கிற விதத்தில் வெளிவரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை அரசாங்கம் விரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே அநேக கிரிப்டோ சந்தையாளர்கள் திட்டங்கள் ஒழுங்குமுறை படுத்தப்படும்வரையில் புதிய விளம்பரங்கள் எதுவும் வெளியிடாமல் இருப்பதாக முடிவெடுத்துள்ளனர்.

‘லோக்கல் சர்க்கிள்ஸ்’- இணையவழி ஆய்வறிக்கை விவரம்

பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ள கிரிப்டோ கரன்சிகள் பற்றி டிஜிட்டல் பிளாட்பார்மாக உள்ள ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ ஒரு ஆய்வை இணையவழியே கடந்த 15 நாட்கள் நடத்தியது. அதில் பதிலளித்தவர்களில் 66% ஆண்களாகவும் 34% பெண்களாகவும் இருந்தனர். ஆய்வில் கிடைத்த முடிவின்படி வெறும் 1% கிரிப்டோ உபயோகிப்பாளர்கள் மட்டுமே இதன் மேல் முழு நம்பிக்கையுடன் உள்ளனர். 12% உபயோகிப்பாளர்கள் “சராசரி” நம்பிக்கையுடன், 22% “மிகக்குறைந்த” அளவு நம்பிக்கையுடன், 49% இந்தியர்கள் “முழுவதும் நம்பிக்கை இல்லாதவர்கள்”, 16% எவ்வித கருத்தும் கூற விரும்பாமலும் இருந்தனர்.

கிரிப்டோகரன்சி சட்டபூர்வமாக்குவது அவசியமா? இல்லையா?

இரண்டில் ஒரு இந்தியர்கள் நம் நாட்டில் கிரிப்டோகரன்சி சட்டபூர்வமாக்க தேவையில்லை என்றும் அதே சமயம் RBI இந்தியாவுக்கென்று தனி கிரிப்டோகரன்சி வெளியிட வழிமுறைகள் ஏற்படுத்தவேண்டும் என்றும் கூறுகின்றனர். 76% பேர் கிரிப்டோகரன்சி சம்பந்தப்பட்ட விளம்பரங்களை ஒழுங்குமுறை திட்டங்கள் வகுக்கப்படும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர். பல கோணங்களிலும் எடுக்கப்பட்ட தனது ஆய்வறிக்கையை ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும். இவையனைத்தையும் கருத்தில் கொண்டு கிரிப்டோகரன்சி குறித்து சரியான ஒழுங்குமுறை திட்டங்கள் உருவாக்கப்படும் என்றே உணர்கிறோம்.