AC இறக்குமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தியாவசியம் இல்லாத பொருட்களின் இறக்குமதிகளை குறைத்துவிட்டு உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தி:

இந்தியாவில் ‘ரெப்ரிஜிரிரன்ட்ஸ்’ எனக் கூறப்படும் குளிரூட்டிகளுடன் கூடிய ஏசியை இறக்குமதி செய்ய மத்திய அரசு முழுமையாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காகவும் சீனாவில் இருந்து இறக்குமதிகளைக் குறைப்பதற்காகவும் அத்தியாவசியம் இல்லாத இறக்குமதிகளின் மீதான விதிமுறையை இந்தியா கடுமையாக்கிக் கொண்டு வருகிறது.

மேலும், உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிப்பதற்காக பலவிதமான நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது இந்தியா. அதே போல, கடந்த மாதம் கார், லாரி, மோட்டார் சைக்கள்களில் பயன்படுத்துகின்ற நியூமேட்டிக் டயர் இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு சந்தை பொருத்தவரை 36,000 கோடி ரூபாய் முதல் 42,000 கோடி ரூபாய் வரையில் ஏசி விற்பனையாகி வருகின்றன. மேலும், இந்த ஏசியில் பெரும்பான்மையானவைகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் ஏசிகள் தான்.

இதன் காரணமாகத் தான் ஏசியின் இறக்குமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. இந்த இறக்குமதி கொள்கையில் மாற்றத்தினை செய்ததற்கான அறிவிப்பினை மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழாக இயங்கி வரும் DGFT (வெளிநாட்டு வர்த்தகத்தின் பொது இயக்குனரகம்) வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் 2019-2020 ஆம் நிதி ஆண்டில் 469 மில்லியன் டாலர் மதிப்புடைய ஸ்பிலிட் ஏசிக்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவற்றில் 241 மில்லியன் டாலர் மதிப்புடைய ஸ்பிலிட் ஏசிக்கள் சீனாவிலிருந்தும் 189 மில்லியன் டாலர் மதிப்புடைய ஸ்ப்லிட் ஏசிக்கள் தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது ஆகும்.

மேலும், இந்தியாவின் இந்த புதிய அறிவிப்பின் மூலம் உள்நாட்டு உற்பத்தியானது நிச்சயம் அதிகரிக்கும் என்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பலன் அடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதே போல சீனா, தாய்லாந்து ஆகிய இரு நாட்டின் உற்பத்தி நிறுவனமும் கடுமையாக சிக்கல்களை சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது.

Author – Gurusanjeev Sivakumar