வணக்கத்தின் இலக்கும் செயல்பாடும்

“மாற்றம் என்பது சொல் அல்ல செயல்”, நம்மாழ்வார் இம்மண்ணுலகை விட்டு நீங்கிய பின்னர் அவர் வாழ்வில் அவரோடு சேர்ந்து நடைபயின்ற பல நல்ல உள்ளங்கள் இணைந்து வழிநடத்தும் இயற்கை வழி வேளாண்மை, வாழ்வியலுக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கூடம் என்ற மைய கருத்துடன் செயல்பட்டு வருகிறது வானகம்.

நஞ்சில்லா உணவு, மருந்தில்லா மருத்துவம், சுவரில்லா கல்வி ஆகிய மூன்று சீரிய இலக்குகளை தங்கள் குறிக்கோளாக கொண்டு அதனை செயலாக்கம் செய்தும் வருகிறார்கள்.

வானகம் உள்ளடக்கிய சிறப்பம்சங்கள்

வானகத்தின் செயல்பாடுகள் அனைத்தும் நிலையான மற்றும் பாதுகாப்பான வேளாண் முறைகளை நாடெங்கும் பரவச்செய்வது, சிறுதானிய உற்பத்தியை பரவலாக்குவது, பண்ணை வடிவமைப்பு, மரபு மருத்துவமும், வாழ்வியலும், வேளாண் விளைபொருட்கள் மதிப்பு கூட்டும் பயிற்சிகள், இன்னும் பல என்று ஒரு நீண்ட ஆராய்ச்சி அடிப்படையிலான பயிற்சிகளை உள்ளடக்கியது.

ஐயா நம்மாழ்வாரின் பிறந்த தினமான ஏப்ரல் 6ம் தேதி மரபு விதை கண்காட்சி மற்றும் பரவலாக்கம் நடத்துகிறார்கள். மேலும் வேளாண்மை சுற்றுச்சூழல் சார்பில் சிறப்பாக பணியாற்றும் 4 பேருக்கு நம்மாழ்வார் விருது மற்றும் பரிசுத்தொகை வழங்குதல், மரபு விதை காப்பாளர்களை கௌரவப்படுத்துதல் போன்ற பல சிறப்பு ஏற்பாடுகளை இந்த அமைப்பினர் செய்துவருகின்றனர்.

ஒரு நாள் இயற்கை வேளாண்மை பயிற்சி

வானகம் மற்றும் வள்ளுவம் இணைந்து நடத்தும் 1 நாள் இயற்கை வேளாண்மை பயிற்சி வருகிற ஞாயிற்று கிழமை டிசம்பர் 26-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை? ஒருங்கிணைந்த பண்ணையம், இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல் மற்றும் பயன்பாடு ஆகியவற்றை பயிற்சி வழி கல்வியாக வழங்குவதே இந்த ஒரு நாள் பயிற்சியின் நோக்கம். பயிற்சி நடைபெறும் இடம் “வள்ளுவம் இயற்கை வேளாண் வாழ்வியல் நடுவம், குளத்துப்பட்டி, நிலக்கோட்டை, திண்டுக்கல்”. பங்களிப்பு பயிற்சி கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.500 வசூலிக்கப்படுகிறது. பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை. முன்பதிவு செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 9566667708 அல்லது 8610457700 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

தனி மனித சுயநலமின்றி நாட்டு மக்கள் அனைவரும் நோய் நொடியில்லா வாழ்வு பெற, நஞ்சில்லா உணவின் அவசியத்தை புரிய வைக்க அரும்பாடுபடும் இவர்கள் பணி சிறக்க வாழ்த்துவோம்.