தகவல் தொலைதொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி மற்றுமொரு அடி முன்னேறிச் செல்கிறோம், அதுவே தமிழக முதலமைச்சர் அறையில் வைக்கப்படவுள்ள மின்னணு தகவல் பலகை CM Dashboard.

தமிழக அரசின் ஒவ்வொரு துறையும் முழுமூச்சுடன் செயல்பட வேண்டும், திட்டங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் செம்மையாக முழுமை பெற ஆவன செய்யவேண்டும் என்பதில் அரசு அதிகாரிகள், துறை அலுவலர்கள் என அனைவரும் பணிசெய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்.

மின்னணு தகவல் பலகையின் சிறப்பம்சங்களும், துவங்கும் நாளும்

கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து துறை செயலர்களுடனான கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்துத் துறைகளின் திட்டங்கள் குறித்த தகவல்களை ஒவ்வொரு நாளும் தவறாமல் கண்காணிக்க உள்ளதாக கூறியிருந்தார். அவ்வாறு தொடர்ந்து கவனிக்க, மின்னணு தகவல் பலகை அறிமுகப்படுத்தப்படும் என்றும் வாரம் ஒருமுறை ஆய்வு செய்ய உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

அதன்படி, முதலமைச்சர் அறையில் வைக்கப்படவுள்ள மின்னணு தகவல் பலகையில் நிகழ்நிலை புள்ளிவிவரங்கள் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு 360 என துறை தொடங்கப் பட்டுள்ளது. அந்த துறைகளின் அனைத்து செயல்பாடுகளையும் தனது அறையில் இருந்தே முதல்வர் நேரடியாக கண்காணிக்கும் வகையில் இந்த மின்னணு தகவல் பலகை (CM Dashboard) செயல்படும் எனத்தெரிகிறது.

அதுமட்டுமல்ல அரசு அளித்துள்ள வாக்குறுதிகள், பல்வேறு அறிவிப்புகள், அனைத்து துறைகளின் பணிகள் முன்னேற்றம், அடுத்த ஒரு ஆண்டுக்கான திட்டம் ஆகியவை குறித்த எல்லா தவகல்களும் இங்கு இடம்பெறும். இதன் மூலம் ஏதாவது இடத்தில் பணியில் தொய்வு இருக்கிறதா? பணியை செயல்படுத்துவதில் சிக்கல் இருக்கிறதா என்றெல்லாம் முதலமைச்சர் நேரடியாக அறிந்துகொள்ளலாம். இந்த தகவல் பலகை டிசம்பர் 22ம் தேதி முதல் செயல்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.