செப் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து பல்வேறு கட்சிகள், ஆம்னி பஸ், லாரி உரிமையாளர்கள் சங்கம், கார் போன்ற வாகன உரிமையாளர்கள், சரக்கு போக்குவரத்து உரிமையாளர்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக சட்டசபையில் மக்கள் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள் கேரள மாநிலத்தில் முன்பு நிறைய சுங்கச்சாவடிகள் இருந்தது எனவும் பின்னர் அவை வெகுவாக குறைக்கப்பட்டு தற்போது வெறும் 3 மட்டுமே செயல்படுகின்றன என்றார். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தமிழகத்தில் போடப்பட்டுள்ள நீளத்தை கணக்கிடுகையில் இங்கே வெறும் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும், ஆனால் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன.

ஆகவே அவை குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். மேலும் அவர் கடந்த செப் 3, 2019-ம் ஆண்டு எக்ஸ்பிரஸ்-ல் தாம்பரம் – திண்டிவனம் இடையே உள்ள நான்கு வழி சாலையில் வசூலிக்கப்படும் சுங்க கட்டணத்தை பற்றி வெளிவந்த அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டினார். NHAI சுங்க கட்டணம் என்ற பெயரில் தமிழக மக்கள் மீது பொருளாதார போர் நடத்துகிறது. ஒரு வட்டி ஏஜென்ட் போல் செயல்படுகிறது. எனவே இந்நடவடிக்கைகளை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதில் அளித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழகத்தில் கூடுதலாக செயல்பட்டு வரும் 32 சுங்கச்சாவடிகளை அகற்ற உரிய நடவடிக்கைகள் உடனே எடுக்கப்படும் என்றார். ஏற்கனவே சென்னசமுத்திரம், வாநகரம், நெமிலி, பரனூர் மற்றும் சூரபட்டு ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளை மூட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்