இந்திய வர்த்தகக்குழுமங்களின் ஜாம்பவானாக இருக்கும் டாடா குழுமத்தின் தாய் நிறுவனம் டாடா சன்ஸ். இந்நிறுவனம் தற்போது சந்திரசேகரன் தலைமையில் ஊக்கசக்தியுடன் செயல்படுகிறது. டாடா குழுமம் விரைந்து அடுத்த நிலைக்கு செல்லவேண்டும் என்ற குறிக்கோளுடன் தற்போது அதன் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் டாடா சன்ஸ் நிறுவனம் கடந்த ஒரு வருடத்தில் பல நிறுவனங்களைக் கைப்பற்றியுள்ளது. தேஜஸ் நெட்வொர்க்ஸ், சன்ரைஸ் தொழிற்சாலை, டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ், செமிகண்டக்டர் உற்பத்தி, ஏர் இந்தியாவில் முதலீடு என்று தன்னை விஸ்தீரணம் செய்து கொண்டே வருகிறது டாடா.

இந்த மாபெரும் திட்டங்களுக்காகத் டாடா சன்ஸ்-க்கு தேவைப்படுவது சுமார் 50,000 கோடி ரூபாய் அளவிலான முதலீடு. இந்நிலையில் டாடா சன்ஸ் வெளிநாட்டு முதலீட்டுச் சந்தையில் தனிப்பட்ட முறையில் 7000 கோடி ரூபாய் தொகையை முதலீடாகத் திரட்ட முடிவு செய்துள்ளது. இந்த முதலீடு மொத்தமும் தமிழ்நாட்டில் செய்ய டாடா முடிவெடுத்துள்ளது. இதுவே நம் காட்டில் பெய்யப்போகும் அடைமழை.

டாடா குழுமம் குறுகிய காலத்திலேயே மொபைல் போன் மற்றும் எலக்ட்ரானிக் கருவிகள் உற்பத்தியில் சிறப்பான வளர்ச்சி அடைந்ததால் இந்த வர்த்தகத்தை விரிவு படுத்த உத்தேசித்துள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக ஒரு மொபைல் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை உருவாக்க முடிவு செய்துள்ளது. மேற்சொன்ன 7000 கோடி முதலீடும் இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். இதன் மூலம் குறிப்பிடத்தக்க வர்த்தகத்தை அடைவது மட்டும் அல்லாமல் நீண்ட கால அடிப்படையில் முக்கியத் திட்டங்களை வகுக்கவும் டாடா தீர்மானித்துள்ளது.