மத்திய அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் விதத்தில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முக்கியமாக MSME அமைப்பின் கீழ் வரும் அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வசதி, வட்டியில் மானியம், பிணையமில்லா கடன் இன்னும் பல என்று சிறப்பு சலுகைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்திய பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கும் இந்த MSME அமைப்புகள் அரசு அறிவித்திருக்கும் சலுகை திட்டங்களை பெறவேண்டுமாயின் அவர்கள் முறைப்படி மத்திய அரசின் ‘உதயம் – UDYAM’ இணையத்தளத்தில் தனது நிறுவனத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு ஒரு நிரந்தர பதிவு எண்ணும், சான்றிதழும் வழங்கப்படும். அதுவே மத்திய அரசின் UDYAM திட்டத்தின் கீழ் ஒரு நிறுவனம் இணைந்ததற்கான அத்தாட்சி.இந்த MSME நிறுவனங்கள் வகைப்படுத்தலுக்கான அளவுகோல்களை, 2020 ஜூலை 1 முதல் மத்திய அரசு திருத்தியமைத்தது.

அதன்படி ஒரு நிறுவனம் பின்வரும் விதிகளுக்குட்பட்டதாக இருந்தால் அது MSME நிறுவனமாக கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிறு நிறுவனம் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் மீது செய்துள்ள முதலீடு 1 கோடி ரூபாய்க்கு மிகாமல் மற்றும் வணிகவருவாய் ஆண்டொன்றுக்கு 5 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும் ; குறு நிறுவனம் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் மீது செய்துள்ள முதலீடு 10 கோடி ரூபாய்க்கு மிகாமல் மற்றும் வணிகவருவாய் ஆண்டொன்றுக்கு 50 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

அதுவே, நடுத்தர நிறுவனம் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் மீது செய்துள்ள முதலீடு 50 கோடி ரூபாய்க்கு மிகாமல் மற்றும் வணிகவருவாய் ஆண்டொன்றுக்கு 250 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும் ;இந்த அறிவிப்பிற்கு பின்பு 01.07.2020 முதல் 31.07.2021 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அடிப்படையில் இத்திட்டத்தில் இணைந்துள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 401319.

அனைத்தும் மத்திய அரசின் ‘UDYAM’ இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டு, 53801 கோடி ரூபாய் முதலீடும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதிக எண்ணிக்கையிலான உதயம் பதிவு செய்த, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை கொண்டுள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

உதயம் பதிவின்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் சிலவற்றையும் நாம் பார்க்கலாம். இந்த பதிவுகள் அனைத்தும் அரசின் https://udyamregistration.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே நடைபெற வேண்டும். இந்த ஒற்றைச்சாளர முறையை தவிர வேறு எந்த தனியார் இணையதளம் வாயிலாகவும் இந்த பதிவு செய்யப்படக்கூடாது.

MSME பதிவு முறைகள் அனைத்தும் கட்டணமில்லாமல், காகிதமில்லா முறையில், ஒவ்வொருவரின் சுய அறிவிப்பின் பெயரில் நடைபெறும் MSME-ன் பதிவு சம்பந்தப்பட்ட அனைத்து நடைமுறைகளும் ஆன்லைனில் மட்டுமே நடைபெறும். MSME-ல் பதிவு செய்யும்போது எந்தவொரு ஆவணங்களோ, ஆதாரமோ பதிவேற்றம் செய்யப்படவேண்டியதில்லை பதிவு செய்வதற்கு ஆதார் எண் ஒன்று மட்டும் இருந்தால் போதுமானது ஆதார் எண்ணுடன் இணைப்பில் இருக்கும்

PAN மற்றும் GST போன்றவற்றை கொண்டு முதலீடு, வணிகவருவாய் போன்ற விவரங்கள் தானாகவே அரசாங்க தரவுத்தளத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும். இந்த இணையதளம் முழுவதும் அரசின் பிற இணையதளங்களான IT மற்றும் GSTIN ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்படும்உதயம் பதிவிற்கு PAN மற்றும் GSTIN மிகவும் அவசியம்.

இது கடந்த ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து அமுலில் உள்ளது.ஏற்கனவே EM-II அல்லது UAM பதிவு செய்திருந்தால் அல்லது MSME அமைச்சகத்தின் அதிகாரம் பெற்ற வேறு ஏதாவது அமைப்பின் மூலம் பதிவுச்சான்றிதழ் பெற்றிருந்தால் அவர்கள் இந்த இணையத்தளத்தில் மீண்டும் பதிவு செய்தல் அவசியம் எந்த ஒரு நிறுவனமும் ஒன்றிற்கும் மேற்பட்ட உதயம் பதிவுகளை வைத்திருக்க கூடாது. இருப்பினும், தயாரிப்பு அல்லது சேவை அல்லது இவை இரண்டும் உள்ளிட்ட எந்த ஒரு கூடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றால் அவை அனைத்தையும் பதிவில் சேர்த்தே குறிப்பிடலாம்