COVID 19 இரண்டாவது அலைக்கு பிறகு வணிக வளாகங்களில்  விற்பனை மெதுவாக அதிகரித்து வருகிறது.

மெட்ரோ சிட்டி அந்தஸ்து பெற்றுள்ள அனைத்து நகரங்களிலும் மால்கள் எனப்படும் வணிகவளாகங்கள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் வேகமாக இயங்கி வருவது வாடிக்கை. கோவிட் அச்சத்தினால் மாநில அரசுகள் ஒவ்வொன்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதனால் மக்கள் அதிகமாக் குவியும் பல்வேறு வியாபாரத் தளங்கள், தியேட்டர்கள் ஆகியன மூடப்பட்டன. கோவிட் பயம் சிறிது குறைந்த பிறகு மால்கள் குறைந்த நேரத்தில் இயங்கலாம் என்று தளர்வுகளுடன் கூடிய அறிவிப்பு வெளிவந்துவிட்டது. அதனால் மக்கள் இப்போது வணிகவளாகங்களை நோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டனர். பல மாதங்களாய் வியாபாரம் மங்கியிருந்த சூழ்நிலையில் இப்போது வர்த்தகம் மெல்ல மெல்ல ஏறுமுகம் காண்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது முதல் அலையைக் காட்டிலும் மிக வேகமான மீட்சி என்று தெரிகிறது. “வேகமாக எடுத்துக்கொள்ளப்பட்ட தடுப்பூசிகள், அதிகரித்து வரும் தேவைகள் மற்றும் பல நிறுவனங்கள் தொடர்ந்து அளித்து வரும் தள்ளுபடி / விலைக்குறைப்பு உத்திகள் ஆகியன இந்த மீட்சிக்கான முக்கிய காரணிகளாக அமைந்த்துள்ளது” என்று CRISIL நிறுவனத்தின் இயக்குனர் ஆனந்த் குல்கர்னி தெரிவித்துள்ளார்.

“மேலும் மால்களில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். முதலீடு செய்யப்படுவது கண்முன் இருக்கும் அசையா சொத்தாக இருப்பதாலும் உடனடி வருவாய் ஈட்டித்தரும் வசதி கொண்டிருப்பதாலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை இதில் வளர்ந்து வருகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆடைகள், அலங்கார பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆடம்பர்க் பொருட்களின் விற்பனை மிக வேகமாக துவங்கிவிட்டதாகவும் இதர பொருட்களான உணவு, சினிமா மற்றும் விளையாட்டு அரங்கங்கள் போன்றவை மெல்ல மெல்லத்தான் வளர்ச்சி காண முடியும் என்றும் தெரிகிறது.

இதுவே 3-வது அலை ஏற்பட்டால் பண்டிகை கால விற்பனை சிறிது பாதிக்கும், மேலும் வாடகை வருவாய் 10 சதவீதம் வரை குறையக்கூடிய வாய்ப்பு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.