மாற்று சிந்தனைகள், புதிய முயற்சிகள், வாடிக்கையாளர் தேவையை புரிந்து கொண்ட சேவை – வெற்றிக்கு வித்திடும் முக்கிய கருவிகள். ரெண்ட் தி ரன்வே (Rent the Runway) நிறுவனம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பேஷன் துறையில் புதிய முயற்சியாக முளைத்தெழுந்தது இந்நிறுவனம்.

பெண்கள் ஆடைகளில் கொண்டிருக்கும் ஆசைக்கு ஒரு நாளும் எல்லை கிடையாது. ஆனால் அவர்கள் விரும்பிய அனைத்து ஆடைகளையும் அணிந்து மகிழ்வது என்பது ஒரு போதும் நடைபெறாது. புதிய ட்ரெண்டுகள், வடிவமைப்புகள், விலை, இன்னும் பல என்று அவர்கள் எண்ணம் நிறைவேறாமல் இருக்க பல காரணங்கள் இருக்கின்றன. கல்லூரி பெண்களில் இருந்து, வேலைக்கு செல்வோர், வீட்டில் இருப்போர், விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்பவர் என்று எல்லோருக்கும் புது வித, நவீனமான, விலை மதிப்புடைய ஆடைகளை அணிய வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் அதெல்லாம் நமக்கெங்கே கிடைக்கும் என்று ஒரு அங்கலாய்ப்புடன் தன் ஆசைக்கு தாமே குழியும் தோண்டி புதைத்துவிடுவார் நிறைய பெண்கள்.

இது போல் சில வருத்தங்களும், அங்கலாய்ப்புகளும் அடித்தளமாக கொண்டு உருவானதே ரெண்ட் தி ரன்வே (Rent the Runway). பேஷன் ஆடைகளை வாடகைக்கு பெறும் வசதியை தன் ரெண்ட் தி ரன்வே (Rent the Runway) மூலம் உருவாக்கி ஆடைகள் உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய பெருமை ஜெனிபர் ஹைமன்-ஐ சாரும். ஜெனிபர் ஹைமன் மற்றும் ஜெனிபர் வைஸ் இருவரும் பட்டப்படிப்பின்போது நெருங்கிய தோழிகள். தொழில்முனைவு பற்றி பல யோசனைகளை விவாதித்துக்கொண்டிருந்த போதுதான் ஜெனிபர் ஹைமனுக்கு ஆடைகள் வாடகைக்கு விடும் நிறுவனம் துவங்குவது பற்றி யோசனை எழுந்தது.

இந்த எண்ணம் தோன்றியபோது பேஷன் உலகில் புரட்சி ஏற்படுத்தக்கூடியது இந்த முயற்சி என்று பெரிய கனவெல்லாம் இல்லாமல் ஒரு நல்ல எண்ணத்தை செயலாக்கம் செய்து முடிந்தவரை சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே களமிறங்கினார் ஜெனிபர்.

ஆரம்பத்தில் இணையம் மூலம் நவீன டிசைனர் ஆடைகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தும் திட்டத்துடன் முதலீட்டாளர்களை ஜெனிபர் சந்திக்கத்துவங்கினார். பேஷன் துறை வல்லுனரான டயானேவை சந்தித்தனர். தங்களை ரெண்ட் த ரன்வே நிறுவனர்கள் என அறிமுகப்படுத்தி கொண்டு தங்கள் சிந்தனையை விவரித்தனர். முதலில் டயானேவுக்கு இந்த முயற்சி வெற்றி பெறுமா என்று கூறமுடியாவிட்டாலும் கூட இருவரின் நம்பிக்கைக்கு வாழ்த்து கூறி அனுப்பினார்.

அதன் பின்னர் மெதுவாக சிறிய அளவில் தங்கள் யோசனைக்கு உயிர் கொடுக்க முடிவெடுத்தனர். தாங்கள் படித்த ஹார்வர்டு கல்லூரிக்குச்சென்று அங்குள்ள மாணவியரிடம் கருத்து கேட்டனர். அவர்கள் வாடகைக்கு ஆடைகள் எடுத்த்து அணிவார்களா என்று கேட்டதற்கு பெருமளவு ஆதரவு கிடைத்தது. அவ்வளவு தான் நம்பிக்கையுடன் சிறிய கடையை ஆரம்பித்து விட்டனர்.

கல்லூரி பெண்கள் பெரும்பான்மையோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் ஆசைகளை பூர்த்தி செய்து கொண்டனர். அதன் பிறகே பெரிய நம்பிக்கையுடன் அடுத்த கட்ட பணிகளில் இறங்கினார் ஜெனிபர். அடுத்த சில மாதங்களில் தேசிய அளவில் இந்த வசதியை ரெண்ட் தி ரன்வே இணையதளம் மூலம் அறிமுகம் செய்தனர். 2009 ம் ஆண்டு இணையதளம் ஆரம்பிக்கப்பட்டது.

தாங்களே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இந்த முயற்சி வரவேற்பு பெற்ற காரணத்தால் மேலும் மேலும் புதிய அறிமுகங்களை கொடுத்து கொண்டே இருந்தனர். பிரத்தியேக ஆடை வடிவமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றுதல், புதிய அறிமுகங்களை கொடுத்தல், உறுப்பினர் முறை, மாற்று அளவு ஆடைகள், ஆடைகள் சேதமடைவது தொடர்பாக காப்பீட்டு கட்டணம், அழகிய பைகளில் வரும் ஆடைகள், நேர்த்தியாக சலவை செய்யப்பட்டு இஸ்திரி போட்டு வரும் ஆடைகள் என பல அம்சங்கள் மனதை கவருவதாக இருந்தன.

கூடவே சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, தினசரி அலுவலக உபயோகத்திற்கு என ஆடைகள் பிரிவு செய்யப்பட்டு இணையத்தில் ஏற்றப்பட்டன. மேலும் கூடவே அணியும் அணிகலன்களும் சேர்க்கப்பட்டன. இப்படி ஒவ்வொன்றாக சேர்ந்து இன்றைக்கு பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்ட யூனிகார்ன் நிறுவனமாக எழுந்து நிற்கிறது இந்த சாதனை பெண்கள் உருவாக்கிய ரெண்ட் தி ரன்வே.

இவர்கள் உருவாக்கிய இந்நிறுவனம் ஆடைகளுக்கான நெட்பிளிக்ஸ், பேஷன் உலகின் உபெர் என்றெல்லாம் புகழப்படுகிறது.

பேஷன் உலகில் வேறு எந்த நிறுவனமும் ஏற்படுத்தியிராத தாக்கத்தையும், மாற்றத்தையும் இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல.