நாளொன்றுக்கு ஒவ்வொரு விதமாக வங்கி மோசடிகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இம்மோசடிகளில் இருந்து தப்புவதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கைகளை RBI, பொது, தனியார் வங்கிகளும் வழங்கிக்கொண்டே தான் வருகின்றன. இருந்தும் மோசடிகள் அதிகரிக்கவே செய்கிறது. மோசடிகள் என்பது மூன்றாம் நபரிடம் இருந்து மட்டுமல்லாது வங்கிகள் வாயிலாகவும் வருகின்றன.

இப்போது கூட்டுறவு சங்கங்கள் பல வங்கிகள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் வருகின்றன. கூட்டுறவு சங்கங்கள் சிலவற்றில் பணம் டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்கள் பணம் இழக்கும் சூழலும் இருப்பதாகத் தெரிகிறது. எந்தெந்த கூட்டுறவு சங்கங்கள் ரிசர்வ் வங்கியின் ஒப்புதலோடு செயல்படுகின்றன என்பது பற்றி ஒரு வாடிக்கையாளர் அறிந்திருக்க நியாயமில்லை.

ஆகவே இந்த புகார்கள் மீது எடுக்கும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி இப்போது அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி கூட்டுறவு சங்கங்கள் எதுவும் இனிமேல் ‘Bank’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது. இது புதிய சட்டம் அல்ல, ஏற்கனவே வங்கி விதிமுறைச் சட்டம் 1949-இன் படி, 29.09.2020 முதல் கூட்டுறவு சங்கங்கள் எதுவும் ‘bank’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சில கூட்டுறவு சங்கங்கள் வாடிக்கையாளர்களின் பணத்தை வாங்குவதும், கடன் வழங்குவதும் அறியப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது போன்று அங்கீகரிக்கப்படாத கூட்டுறவு சங்கங்களில் வாடிக்கையாளர் வைக்கும் டெபாசிட்களுக்கு எவ்வித காப்பீடும் கிடையாது. ஆகவே வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது அவசியம்.