மத்திய அரசு சமீபத்தில் ஜவுளி, மனிதர்களால் உற்பத்தி செய்யப்பட்ட நூல் (MMF), துணிகள் மற்றும் ஜவுளி தொழில் நுட்பம் சார்ந்த 10 பிரிவுகள்/பொருட்களுக்கு ரூ.10,683 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.  இதன் மூலம் தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா,  பஞ்சாப், ஆந்திரபிரதேஷ், தெலுங்கானா, ஒரிசா, உத்திரபிரதேசம் ஆகிய பல மாநிலங்கள் அதிகளவில் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் ஜவுளி வர்த்தகத்தில் தமது நிலையான ஆதிக்கத்தை செலுத்த இந்தியா தயாராகி வருகின்றது.

இந்த PLI திட்டத்தினால் தமிழகத்தில் 7.5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் விஜய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “சிந்தெடிக் ஜவுளி தயாரிப்புகளில்  தீவிர கவனம் செலுத்தப்படும். சிந்தெடிக் ஜவுளி தயாரிப்பில் மூலப்பொருட்கள் விலை உயர்ந்த நிலையில் உள்ளதால் இறக்குமதி வரி மீதான சலுகை குறித்த பல கோரிக்கைகள் வந்து கொண்டு இருக்கின்றன. தயாரிப்பாளர்கள் இப்பொருட்களில் சர்வதேச விலை இருக்கவேண்டும் என கேட்கின்றனர். இந்த திட்டத்தில் பெண்களின் பங்கு அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 வருடங்களுக்கும் மேல் உள்ள நிறுவனங்கள் பலவும் PLI திட்டத்தின் கீழ் பயனடையலாம்.  இதன் மூலம் ரூ.19000 கோடி மதிப்புள்ள புதிய முதலீடுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தி வருவாய் ரூ.3 லட்சம் கோடிகளை தாண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது” என்றும்  கூறினார்.

நவீன காலத்தில் தொழில்நுட்பம் சார்ந்த ஜவுளி பிரிவு பல்வேறு இடங்களிலும் காலூன்றி உள்ளது. பொருளாதாரம், உட்கட்டமைப்பு, தண்ணீர், ஆரோக்கியம் மற்றும் துப்புரவு, பாதுகாப்பு, வாகனங்கள், விமானம் போன்ற பல துறைகளிலும் தொழில்நுட்பம் சார்ந்த ஜவுளி மிகச்சிறந்த பங்காற்றுகிறது. PLI திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் புதிய முதலீடு செய்பவர்கள் இந்த துறையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று தெரிகிறது.

ரிலையன்ஸ், பாம்பே டையிங், வெல்ஸ்பன் கிளோபல் பிராண்ட்ஸ், அர்விந்த் குழுமம், இன்டோராமா  சிந்தெட்டிக்ஸ், வெல்நோன் பாலியெஸ்டர்ஸ் உள்ளிட்ட 35 கம்பெனிகள் ரூ.10,150 கோடி PLI திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய உள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது.