தமிழக அரசு விவசாயிகளின் நன்மைக்கென பல அருமையான திட்டங்களை வேளாண் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். நமது ஆரோக்கியத்திற்கு அருமருந்து என்று கருதப்படும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதிலும் கூடுதல் கவனம் இம்முறை செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நபார்டு வங்கி, இயற்கை முறையில் செய்யப்படும் விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. இதனால் பாரம்பரிய சிறு தானியம் பயிரிடுவோர் மிகவும் பயனடைந்துள்ளனர். கொரோனா காலத்திலும் கூட யூடியூப் மற்றும் இணையம் வழியாகவும்  இயற்கை விவசாயம் தொடர்பாக பல்வேறு பயிற்சிகளை நபார்டு வங்கி வழங்கியது. மேலும் விவசாயிகளுக்கு தேவையான கடனுதவி உள்ளிட்டவைகளையும் வழங்கியது.

இயற்கை விவசாயம் என்பது உணவுப்பொருட்களின் தரத்திற்கு உத்திரவாதம் அளிப்பது மட்டும் அல்லாது மண்ணின் வளத்தையும் பாதுகாக்க கூடிய விஷயம். ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் ஆகியவற்றை தவிர்த்து இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி செய்யக்கூடிய இயற்கை விவசாயம் மண், நீர், காற்று, மனிதன், விலங்குகள் ஆகிய எதற்கும் கேடு விளைவிக்காது, நமது பாரம்பரியத்தையும் சேர்த்து காப்பாற்றி வரும் என்பது உண்மை.  இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் விவசாயிகளுக்கும் நல்ல பலன் கிடைக்கும். 

இவ்வாறு விவசாயம் செய்வோர் அல்லது இயற்கை விவசாயம் செய்ய விரும்புபவர் நபார்டு வங்கியை அணுகினால்  அவர்களுக்கு தேவைப்படும் பயிற்சி அளிக்கப்படும். மேலும் கடன் உதவியும் வழங்கப்படும்.