இந்தியா-ASEAN பொறியியல் கூட்டு உச்சிமாநாடு துவக்க விழா கடந்த திங்களன்று சிறப்பாக நடைபெற்றது. EEPC – பொறியியல் ஏற்றுமதி அபிவிருத்தி கழகம் மத்திய அரசின் வெளிவிவகார அமைச்சரவை மற்றும் வர்த்தகத்துறை ஆகியவற்றுடன் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த துவக்க விழா உரையில் பேசிய மத்திய அமைச்சர் அனுப்பிரியா படேல் “ASEAN இந்திய ஏற்றுமதியின்  மிகப்பெரிய இலக்குகளில் ஒன்றாக இருப்பதினால் இது இந்தியாவிற்கு ஒருமிக முக்கியப்  பகுதியாகவே  கருதப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் 2021-22ல் உலக ஏற்றுமதி இலக்கை சமாளிக்கும் விதத்தில் 400 பில்லியன் டாலர்களாக இதன் மதிப்பு இருக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா-ASEAN ஆகிய இரண்டிலுமே திறன்  கொண்ட மக்கள், வலுவான தயாரிப்பு மற்றும் சேவை துறைகள் இதர தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் அதற்குரிய நிறுவனங்கள் ஆகிய யாவும் சிறந்த முறையில் ஒத்துழைப்பு வழங்க ஏதுவாக உள்ளன. அனைத்தும் சேர்ந்து அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் 5.8 டிரில்லியன் பொருளாதார வளத்தை கொண்டிருக்கும்போது வணிகம் சிறக்கவும் இந்தியா-ASEAN ஆகிய இரண்டிற்குமிடையே முதலீட்டை ஊக்குவிக்கவும் முடியும் என்றும் தெரிய  வருகிறது.

“ஆத்மநிர்பர் பாரத் அபியான்” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு சமீபத்தில் production-linked incentive (PLI) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மதிப்பு 26 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ், மருந்து, ஆட்டோமொபைல்ஸ், மருத்துவ உபகரணங்கள் இன்னும் பிற என்று 13 துறைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம். ஆகவே இந்த துறைகளிலிருந்து முதலீடு அதிகரிக்கவும் தயாரிப்பு தகுதிகள் மேம்படவும் வாய்ப்பு அதிகரிக்கும்.