தனியார் வங்கியான HDFC கிராமப்புறங்களிலும் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்குடன் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் செமி-அர்பன் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள IPPB வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வங்கித் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவது இலகுவாகும்.

இந்திய அஞ்சல் துறையின், இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி, நாடு முழுவதும் 650 கிளைகளையும், 1 லட்சத்து 36 ஆயிரம் வங்கிச் சேவை முனையங்களையும் கொண்டுள்ளது. இவ்வங்கி 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மஹாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்களுக்கு, இவ்வங்கிக் கணக்கு வாயிலாக ஊதியம் வழங்கப்படுகிறது.

சுமார் 4.7 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள IPPB, HDFC வங்கியுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் அவர்களுக்கு நிதி அணுகல் உட்பட பன்முக சலுகைகளை வழங்கவிருக்கிறது.

2 லட்சத்திற்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள், கிராம சேவகர்கள் ஆகியோருக்கு ‘மைக்ரோ ஏ.டி.எம்., மற்றும் பயோமெட்ரிக்’ சாதனங்களை வழங்கி, வங்கிகள் இல்லாத கிராமப்புறங்களில் வீடு தேடி நிதிச் சேவைகளை அளித்து வருகிறது. மேலும் டிஜிட்டல் வழி சேவைகளை இலகுவாக செயல்படுத்தவும் செய்கிறது IPPB.

IPPB நிர்வாக இயக்குனர் அளித்த பத்திரிகை செய்தி

IPPB-யின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜே.வெங்கட்ராமு கூறுகையில், ”பல்வேறு குடிமக்களை மையப்படுத்தக்கூடிய சேவைகள் அதாவது டிஜிட்டல் தொழில்நுட்பங்களை கொண்டு கடன் வழங்கும் நிறுவனங்களின் கூட்டணியுடன் வாடிக்கையாளர்களுக்கு வீட்டிலேயே கடன் வழங்குவது போன்ற சேவைகளுக்காக ஒரு ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்குவதே எங்கள் முயற்சி” என்று கூறினார்.

IPPB-ன் போர்ட்ஃபோலியோ சிறப்பம்சங்கள்

சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு ஆகிய இரண்டையும் கொண்டு பரந்த போர்ட்ஃபோலியோவை கொண்டது IPPB இன் தயாரிப்பு. இதன் இதர பிற முக்கிய சேவைகள் – 24×7 உடனடி பணப் பரிமாற்றம், ஆதார் வழி கட்டண முறை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் உதவித்தொகை செலுத்துதல், பில் மற்றும் பயன்பாட்டு பேமண்டுகள், டிஜிட்டல் லைஃப் சான்றிதழ், மூன்றாம் தரப்பு பொருட்கள் போன்றவை.