GST அமலுக்கு வந்தபோது இந்த வரி முறையில் மாநிலங்கள் இழப்புகளை சந்தித்தால் மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடுகள் வழங்கும் என்று அறிவித்திருந்தது. அதாவது மாநிலங்களின் வருட வருவாய் 14%-க்கும் குறைவாக இருக்கும்பட்சத்தில் உரிய இழப்பீட்டை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும். இந்த அறிவிப்பிற்கு ஒப்புதல் அளித்தன. ஆனால் அந்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று தொடர்ந்து மாநிலங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.

மாநில அரசுகளின் தொடர் போராட்டத்தின் பலன்

கொரோனாவுக்குப் பிறகும் கூட மத்திய அரசு நிலுவைத் தொகையை கொடுக்காமல் இருந்ததால் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு போராடி வருகின்றன. பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியன் பயனாக இழப்பீட்டு தொகையை பல தவணைகளாக வழங்கி வருகிறது. இருப்பினும் இன்னும் கோடி கணக்கில் தொகை நிலுவையில் உள்ளதாக மத்திய அரசே கூறியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு வழங்கிய ரூ.1.15 லட்சம் கோடி இழப்பீட்டு தொகை

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதியமைச்சகம், 27 மாநிலங்களுக்கு ரூ.37134 கோடி GST இழப்பீடு இன்னும் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தது. அதில் தமிழகத்துக்கு மட்டும் 2021-22 நிதியாண்டில் ரூ.2894 கோடி பாக்கி உள்ளது என்று தெரிகிறது. அதே சமயம் எவ்வளவு விரைவில் மத்திய அரசு இந்த நிலுவைத் தொகையை வழங்கும் என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை. இந்த நிதியாண்டில் இதுவரை ரூ.1.15 லட்சம் கோடி (ஜூலை-75000 கோடி, அக்டோபர் – 40000 கோடி) GST இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.