கியாஸ் சிலிண்டர் விலை என்பது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்தே அமையும். ஓவ்வொரு முறை கச்சா எண்ணெய் விலை உயரும்போதும் சமையல் எரிவாயு விலையும் உயரும் என்பது நாம் அறிந்ததே.


கடந்த நவம்பர் மாதத்திலிருந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் பாதிப்பாக பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலையும் உயர்ந்து பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 100க்கும் மேல் விற்பனையாகிக்கொண்டு வருகிறது. இதனால் மக்களின் அன்றாடத் தேவைக்கான செலவு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது யதார்த்தமான உண்மை.


இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான எரிவாயு விலை விபரம் எண்ணெய் நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் LPG சிலிண்டருக்கான விலையில் ரூ.25 உயர்த்தியுள்ளது. இதனால் ஒரு 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.875.50 ஆக அதிகமடைந்துள்ளது. நடப்பு ஆண்டில் 2021-ல் சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படுவது இது 6 வது முறையாகும்.


இந்த விலை உயர்வு வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மட்டுமே. வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 5 ரூபாய் குறைந்துள்ளது. அதன் விலை ரூ.1,756 ஆக விற்பனையில் உள்ளது. மொத்தத்தில் இந்த விலை உயர்வு நடுத்தர மக்களுக்கு மேலும் நிதிச்சுமையை ஏற்படுத்தும்.