உலகில் உள்ள முன்னணி குளிர்பான நிறுவனங்களில் ஒன்றான பெப்சிகோ தங்களின் ஸ்னாக்ஸ் விற்பனையையும் அதன் உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும் என முடிவு செய்து இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதிலும் தங்களது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் உத்திரப்பிரதேசத்தில் ஒரு தொழிற்சாலையை புதிதாக அமைக்க உள்ளது பெப்சிகோ நிறுவனம்.

814 கோடி ரூபாய் முதலீடு:

உத்திரப்பிரதேசத்தில் உள்ள மதுரா என்ற இடத்தில் அந்த மாநில அரசினுடைய உதவியுடன் பெறப்பட்ட நிலத்தில் ரூ.814 கோடி மதிப்பிலான முதலீட்டில் தொழிற்சாலையை அமைக்க உள்ளது பெப்சிகோ நிறுவனம். உத்திரப்பிரதேச மாநில அரசுக்கும் பெப்சிகோ நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இந்நிலையில் இந்த தொழிற்சாலை 2021-ம் ஆண்டில் நடுவில் முழுமையாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக உத்திரப்பிரதேச அரசின் தொழிற்துறை வளர்ச்சி அமைப்பானது மதுரா மாநிலத்தின் கோசி என்னும் பகுதியில் கிட்டத்தட்ட 35 ஏக்கர் அளவிலான நிலத்தைப் பெப்சிகோ நிறுவனத்திற்குக் கொடுத்து உள்ளது.

இந்த புதிய தொழிற்சாலையின் முக்கிய வர்த்தகப் பொருளானது சிப்ஸ் தான். இதற்கென அந்த நிறுவனம் தங்களின் உற்பத்திக்குத் தேவைபடும் உருளைக்கிழங்குகளை அங்கு சுற்றி உள்ள பகுதிகளில் இருந்தே கொள்முதல் செய்யவுள்ளதாக பெப்சிகோ அறிவித்துள்ளது. இதன் மூலமாக அப்பகுதியை சார்ந்த விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.

பெப்சிகோ இந்தியா நிறுவனத்தினுடைய தலைவர் அகமது அல் ஷே அவர்கள் கூறும்போது, 2018-ம் ஆண்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்த திட்டத்தை ரூ.500 கோடி முதலீட்டில் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த திட்டத்தின் மதிப்பானது ரூ.814 கோடி ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 1990-ம் ஆண்டு முதல் பெப்சிகோ நிறுவனம் உத்திரப்பிரதேசத்தில் பல நிறுவனங்கள் உடன் கூட்டு சேர்ந்து குளிர்பானங்களைத் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Author – Gurusanjeev Sivakumar