வர்த்தகப் பற்றாக்குறை 17.94 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தபோதும், பொறியியல், பெட்ரோலியம் மற்றும் ரத்தினங்கள் மற்றும் நகைப் பிரிவுகளின் ஆரோக்கியமான செயல்திறனால் ஜனவரி மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 23.69 சதவீதம் அதிகரித்து 34.06 பில்லியன் டாலராக இருந்தது. வர்த்தக பற்றாக்குறை கடந்த ஆண்டு இதே மாதத்தில் 14.49 பில்லியன் டாலரில் இருந்து 17.94 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இறக்குமதி 23.74 சதவீதம் அதிகரித்து 52.01 பில்லியன் டாலராக உள்ளது என்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்தமாக, ஏப்ரல்-ஜனவரி 2021-22 இல் ஏற்றுமதி 46.53 சதவீதம் அதிகரித்து 335.44 பில்லியன் டாலர்களாக இருந்தது, இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 228.9 பில்லியன் டாலர்களாக இருந்தது. இந்த காலகட்டத்தில் இறக்குமதி 62.68 சதவீதம் உயர்ந்து 495.83 பில்லியன் டாலர்களாக உள்ளது.

தரவுகளின்படி, ஜனவரி மாதத்தில் மட்டும் குறிப்பிட்ட சில பொருட்களின் இறக்குமதி, ஏற்றுமதி விவரம்

தங்கம் இறக்குமதி 2.4 பில்லியன் டாலர்கள் (40.42 சதவீதம் குறைந்துள்ளது)
கச்சா எண்ணெய் இறக்குமதி 11.43 பில்லியன் டாலர்கள் (21.3 சதவீதம் அதிகரித்துள்ளது)
பொறியியல் ஏற்றுமதி 9.2 பில்லியன் டாலர்கள் (24.13 சதவீதம் அதிகரித்துள்ளது)
பெட்ரோலியம் 3.73 பில்லியன் டாலர்கள் (74.73 சதவீதம் அதிகரித்துள்ளது)
ரத்தினங்கள் மற்றும் நகைகள் 3.23 பில்லியன் டாலர்கள் (13.83 சதவீதம் அதிகரித்துள்ளது)
மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி 2.05 பில்லியன் டாலர்கள் (1 சதவீதம் குறைந்துள்ளது)

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு நடப்பு ஆண்டில் ஏற்றுமதி இலக்காக நிர்ணயிக்கும் மதிப்பு

FIEO தலைவர் A சக்திவேல் கூறுகையில், 2021-22 ஆம் ஆண்டிற்கான வட்டி சமன்படுத்தும் திட்டத்திற்கான கூடுதல் பட்ஜெட் மற்றும் 2022-23 ஆம் ஆண்டிற்கான 2,621.50 கோடி ஒதுக்கீடு திட்டம் தொடர்வதற்கான உத்தரவாதத்தை அளித்துள்ளது, மேலும் “இது தொடர்பாக பொருத்தமான அறிவிப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIEO) துணைத் தலைவர் காலித் கான் கூறுகையில், தற்போதுள்ள வளர்ச்சி விகிதங்கள் அடிப்படையில் பார்க்கும்போது நடப்பு நிதியாண்டில் இந்தியா ஏற்றுமதி இலக்காக 400 பில்லியன் டாலரை எட்டும் என்று தகவல் தெரிவித்துள்ளார்.