இரண்டு வாரங்களுக்கு முன்பே நாம் செய்தி வெளியிட்டிருந்தது போல் நாளை மற்றும் அதற்கு அடுத்த நாள் டிசம்பர் 16 & 17 ஆகிய 2 நாட்களும் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். அதையொட்டி, இந்த 2 நாட்களும் வங்கி சேவையானது தடைபடக்கூடும். ATM மையங்களிலும் பணத்தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த 2 நாட்களும் நடைபெறும் இப்போராட்டம் நாடு தழுவிய நிலையில் இருக்கும் என்று வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

2021-22ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். வங்கிகள் பலவற்றின் வாராக்கடன் நிலுவைகள் ஈடு செய்வதற்காகவும், பல சீர்திருத்தங்கள் செய்ய வேண்டி இருப்பதாலும் இது அவசியம் என்று குறிப்பிட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த எதிர்ப்புகள் நாடு முழுவதும் கிளம்பியுள்ளது.

தனியார் மயமானாலும் வங்கி ஊழியர்களின் சம்பளம், இதர படிகள் வழக்கம்போல் இருக்கும்

இந்நிலையில் 2021-22 நிதியாண்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தனியார் மயமாக்கப்பட்டாலும் கூட வங்கித் தொழிலாளர்களின் சம்பளம், ஓய்வூதியம் அனைத்தும் எவ்வித மாற்றமுமின்றி எப்போதும் போல் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இதையெல்லாம் வங்கி ஊழியர்கள் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவு எதுவும் எட்டவில்லை.

பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி கோரிக்கை

இந்த போராட்டத்தில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் அனைவரும் பங்கு பெற இருப்பதால் பொதுமக்கள் தங்கள் வங்கி பணிகளை முன்னெச்சரிக்கையாக முடித்து வைத்துக்கொள்வது நல்லது. தனியார் வங்கிகள் எப்போதும் போல் செயல்படும் என்றே தெரிகிறது.