ஜனவரி 28, 2022 இல் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவில் அந்நிய செலாவணி சொத்துக்களின் மறுமதிப்பீடு காரணமாக நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கடுமையாக சரிந்தது.

ரிசர்வ் வங்கி தரவுகள் கூறுவது என்ன?

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சமீபத்திய தரவுகளின்படி, மொத்த கையிருப்பு வாரத்தில் $4.5 பில்லியன் குறைந்துள்ளது, முக்கியமாக வெளிநாட்டு நாணய சொத்துக்கள் $3.5 பில்லியன் வீழ்ச்சியடைந்துள்ளது. வாரத்தில் தங்கம் கையிருப்பு 844 மில்லியன் குறைந்துள்ளது. 2021 செப்டம்பர் இறுதி நிலவரப்படி, ரிசர்வ் வங்கி 743.84 மெட்ரிக் டன் தங்கத்தை வைத்துள்ளது. 451.54 மெட்ரிக் டன் தங்கம் வெளிநாடுகளில் பாங்க் ஆஃப் இங்கிலாந்து மற்றும் பேங்க் ஃபார் இன்டர்நேஷனல் செட்டில்மென்ட்ஸ் (பிஐஎஸ்) ஆகியவற்றில் உள்ள நிலையில், உள்நாட்டில் 292.3 டன் தங்கம் உள்ளது.

பிப்ரவரி 5, 2021 இல் முடிவடைந்த வாரத்தில் கையிருப்பு $6.2 பில்லியன் குறைந்தது. அதற்கு பிறகு ஏற்பட்ட மிகக்கடுமையான வீழ்ச்சியாக தற்போதைய வெளிநாட்டு நாணய கையிருப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரை அந்நிய செலாவணி கையிருப்பு சீராக உயர்ந்துள்ளது. ஆனால், அதன்பின் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி

கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 90 டாலருக்கு மேல் நகர்ந்து வருவதால், எண்ணெய் விலை உயர்வால் அதிக இறக்குமதிச் செலவு ஏற்படும் என்பதால் ரூபாய் மதிப்பு அழுத்தத்தில் உள்ளது. நாணய சந்தையில் ஏற்ற இறக்கத்தை குறைக்க ரிசர்வ் வங்கி தலையிடுகிறது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்திற்கும் மேல் இறக்குமதி செய்கிறது. எண்ணெய் விலையில் 10 சதவீதம் அதிகரிப்பு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையில் $15 பில்லியன் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 119.2 சதவீதம் அதிகரித்து 2021 ஏப்ரல்-டிசம்பர் காலத்தில் 118.3 பில்லியன் டாலராக இருந்தது. இந்த விகிதத்தில், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி பில் நிதியாண்டு 2022-ல் 158 பில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.