பிப்ரவரி 1ம் தேதி நாடு மொத்தமும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பட்ஜெட் 2022-23 மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு சிறப்பம்சங்களையும், திட்டங்களையும் தனது பட்ஜெட்டில் அவர் அறிமுகப்படுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டில் டிஜிட்டல் வர்த்தகம், டிஜிட்டல் பணப்பரிமாற்றம், வங்கி சேவைகளில் டிஜிட்டல் முறை, மின்னணு செயல்பாடுகளில் அதிக முன்னேற்றம் இப்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இது தொடர்பாக இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தேசத்தில் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்த டிஜிட்டல் நாணயம் / ரூபாய் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் என்று அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

டிஜிட்டல் வங்கி சேவை நாட்டில் ஒவ்வொரு பிரஜைக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக நாட்டின் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி பிரிவுகள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். ECLGS எனப்படும் அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டம் அடுத்த ஆண்டு அதாவது 2023 மார்ச் மாதம்வரை நீட்டிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

2023-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் 5G தொழில்நுட்பம் கிடைக்க ஏதுவான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதற்கு ஏதுவாக அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலம் நடப்பு ஆண்டில் நடைபெறும் என்று தெரிகிறது. 2025க்குள் கிராமங்களில் ஆப்டிகல் ஃபைபர் அமைக்கும் பணியை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 80 லட்சம் வீடுகள் நடப்பு நிதியாண்டில் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் கட்டி முடிக்கப்படும் இதற்காக ரூபாய் 48,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் வரிச்சலுகை வசதி. பொதுத்துறை திட்டங்களில் இறையாண்மை பசுமைப் பத்திரங்கள் வெளியிடும் முயற்சியால் பொருளாதாரத்தில் கார்பன் அடிச்சுவடு முன்முயற்சி குறைக்கப்படும்.

கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் வரி விகிதம் 18.5%-லிருந்து 15%-ஆக குறைக்கப்படுகிறது. GST அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 2022 ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக ரூ.1,40,986 கோடி வசூல் ஆகியுள்ளது. வரி விதிப்பு முறை இன்னமும் எளிமையாக்கப்பட்டுள்ளது. ஐடி ரிட்டர்ன்களை தாக்கல் செய்த 2 ஆண்டுகளுக்குள் மக்கள் புதுப்பிக்கப்பட்ட வருமானத்தை தாக்கல் செய்யலாம். இன்னும் பல அம்சங்களை கொண்டதாக வெளிவந்துள்ளது 2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்.