தமிழக மாவட்டங்களில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள்

தமிழ்நாட்டின் பிரதான பயிர் தென்னை. நம் மாநிலத்தில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களின் மூலம் தேங்காய் பருப்பு பரிவர்த்தனை செய்யப்படுகிறது. மொத்தம் 20 ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் உள்ளன. அவை கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்த 20 ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் ஆனைமலை, ஒட்டன்சத்திரம், அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், சத்தியமங்கலம், உசிலம்பட்டி, பரமத்திவேலூர், தேனி, பெதப்பம்பட்டி, உடுமலைப்பேட்டை, வெள்ளக்கோயில், குடியாத்தம் மற்றும் இராஜபாளையம் ஆகிய 13 விற்பனை கூடங்களில் மின்னணு பரிவர்த்தனை செய்யப்படுகிறது. மேலும் தென்னை விவசாயிகள் பயனடையும்படி நவீன வசதிகளான உலர்கள வசதி, தேங்காயை தேங்காய் பருப்பாக மாற்றுவதற்கு உலர்த்தும் எந்திர வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.3 லட்சம் வரை கடன் பெறும் வசதி

தேங்காய் விலை வீழ்ச்சியடையும் எனும்போது விவசாயிகள் வருத்தப்பட தேவையில்லை. அவர்கள் தேங்காய் பருப்பு மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கிகளில் இருப்பு வைத்துக்கொள்ளலாம். அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை கடன் பெறும் வசதியும் உள்ளது. இந்த கடனுக்கு முதல் 15 நாட்களுக்கு வட்டி இல்லை. பிறகு 6 மாதங்கள் வரை 5% வட்டி என்று கணக்கிடப்படும்.

ஈரோட்டில் அதிகபட்ச விலைக்கு விற்கப்பட்ட தேங்காய் பருப்புகள்

நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச ஆதார விலை தேங்காய் பருப்பு ஒரு குவிண்டால் ரூ.10,335. அதுவே சமீபத்தில் ஈரோடு பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அதிகபட்சமாக ரூ.10476-க்கு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

தென்னை விவசாயிகள் இந்த எண்ணில் அழைக்கலாம்

தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகள் நலம் பெற அறிவிக்கப்பட்டிருக்கும் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய தென்னை விவசாயிகள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகலாம். மேலும், விவரங்களுக்கு வேளாண்மை துணை இயக்குநர் அவர்களை 9445657993 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு வேளாண்மைத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.