கிரிப்டோ கரன்சி ஈட்டு வருவாய் மீது அரசு புதிதாக வரி விதித்துள்ளது குறித்த விவாதத்தில் தற்போது தனது மௌனத்தை கலைத்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த வரி விவகாரம் பல்வேறு தரப்பிலும் நேர்மறை, எதிர்மறை கருத்துக்கள் கொண்டு வித்தியாசமான கோணங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு தரப்பினரின் கருத்து கூறுவது என்னவென்றால், எப்போது இந்த கிரிப்டோ நாணயங்கள் வரிவிதிப்பிற்குட்படுகிறதோ அப்போதே அது சட்டபூர்வமாக்கும் நடவடிக்கையின் முதல் படிதான் என்கின்றனர்.

கிரிப்டோ கரன்சிகள் பரிவர்த்தனை செய்வதன் மூலம் ஈட்டப்படும் லாபத்தின் மீது தான் அரசு வரி விதித்துள்ளது. மற்றபடி அந்த கரன்சிகளை தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது, சட்டப்பூர்வமாக்குவது பற்றி எந்த ஒரு தீர்மானமும் இன்னும் முழுவதும் நிகழவில்லை என்று கூறினார். இந்த திட்டங்கள் குறித்த ஆலோசனைகள் எனக்கு உள்ளீடாய் வரும் சமயத்தில் அது பற்றி மேலும் முன்னேறிச்சென்று தீர்மானம் எடுக்க முடியும் என்றார்.

ரிசர்வ் வங்கி தனியார் கிரிப்டோ கரன்சிகளின் பரிவர்த்தனைகளை எந்த விதத்திலும் வரவேற்கவில்லை. காரணம் இந்திய பொருளாதாரத்தின் நிதித்தன்மைக்கு அது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். சட்ட விதிமுறைகள் எதுவும் வகுக்கப்படாத தனியார் கிரிப்டோகரன்சிகள் ஏற்புடையது அல்ல என்று ரிசர்வ் வங்கி இதை எதிர்க்கிறது. பணவியல் கொள்கை கூட்டத்திற்கு பின் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கிரிப்டோகரன்சிகளுக்கு இப்போதைக்கு அடிப்படை மதிப்பு எதுவும் இல்லை, தனியார் கிரிப்டோவில் செய்யப்படும் முதலீடு அவரவர் சொந்த ரிஸ்கின் அடிப்படையிலேயே அமைகிறது. அரசு இதன் பாதிப்புகளுக்கு பொறுப்பேற்காது என்று தெளிவாக கூறியுள்ளார்.