SEMG-ன் 75% பங்குகள் இப்போது TVS இடம்

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான TVS நிறுவனம் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபடுவதில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. இதனை செயல்படுத்த ’சுவிஸ் இ-மொபிலிட்டி’ குழுமம் (Swiss e-Mobility Group) நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளை தற்போது வாங்கியுள்ளது TVS. இந்த 75% பங்குகளின் மதிப்பு ஏறக்குறைய 100 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 752 கோடி என்று தெரிகிறது.

சுவிஸ் இ-மொபிலிட்டி குழுமம் (SEMG) நிறுவனத்தின் பிரபல மாடல்கள்

சுவிஸ் இ-மொபிலிட்டி குழும நிறுவனம் 2018-ம் ஆண்டில் துவங்கப்பட்டு, ஸ்விஸ் நாட்டில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்து முன்னணி நிலையில் உள்ளது. மிக அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் பைக்குகளை இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது. அத்துடன் ரீடைல் வர்த்தகக் கடைகளையும் வைத்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் பிரபலமான மாடல்கள் Simpel, Cilo, Allegro, Zenith ஆகியவை. அத்துடன் அல்லாது ube, Haibike, Canondale, Kalkhoff, Focus, Stromer, Moustache, KTM ஆகிய எலக்ட்ரிக் பைக்குகளின் முக்கிய விநியோகஸ்தராகவும் உள்ளது. இந்த நிறுவனத்தின் 75% பங்குகளை தான் இப்போது TVS நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிகழ்வு குறித்து TVS மோட்டார் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது

“நீடித்து நிலைத்திருப்பதில் தன்னுடைய இருப்பை என்றென்றும் விரும்பும் TVS மோட்டார் நிறுவனம் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக எலக்ட்ரிக் வாகனங்களில் அதிக முதலீடு செய்து வருகிறது. சுற்றுச்சூழல், தன் வாழ்வு சார்ந்த அக்கறை ஆகியவை மீது இப்போதெல்லாம் மக்கள் அதிதீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த மாற்றத்தை கருத்தில் கொண்டு அவர்களுடன் இணைந்து பணியாற்ற TVS மோட்டார் தனது முதலீடுகளை எலக்ட்ரிக் வாகனத்துறையில் செய்து வருகிறது.

இதற்கு முன்பே நார்டன் மோட்டார்சைக்கிள், EGO மூமென்ட் எனும் இரண்டு நிறுவனங்களை வாங்கியிருந்த நிலையில் இப்போது மற்றுமொரு முன்னணி எலக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனமான SEMG-ன் பங்குகளையும் வாங்கியுள்ளது TVS நிறுவனம். விரைவில் மீதமுள்ள 25% பங்குகளையும் கூட TVS வாங்கலாம் என்று எதிர்பார்க்கின்றனர்.