பங்கு சந்தை என்றாலே ஏற்றமும் இறக்கமும் எப்போதுமே இருக்கும். இந்நிலையில் சமீபமாக முதலீட்டாளர்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர், காரணம் தொடர்ச்சியாக பல நாட்கள் சரிவையே சந்தித்து வருகின்றனர் அவர்கள். சந்தை நிலவரம் இறங்கு முகத்தில் இருக்கும்போது முதலீட்டாளர்களுக்கு வருத்தம் தரும்.ஆனால் புதிதாக முதலீடு செய்பவர்களுக்கு அது வரவேற்பாக அமையும். இத்தகைய சவால்களை இங்கு தவிர்த்தல் இயலாதது.

2020ம் ஆண்டு மார்ச் மாதம் தொட்டே கொரோனா அலை பரவும்போது துவளுவதும் பின்பு புத்துணர்ச்சியுடன் செயல்படுவதும் தொடரும் நிகழ்வுகள். அதே போல் இரண்டு மற்றும் மூன்றாம் அலைகளை சந்தித்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் சவால்களை எதிர்நோக்க தயாராகி கொண்டுள்ளனர்.

2020-ல் பங்கு சந்தை இறக்கம் கண்டபோது நிஃப்டி 7511 என்ற குறைந்தபட்ச நிலை வரை சென்றது. பின்பு நிலைமை சரியான பிறகு மெல்ல மெல்ல ஏற்றம் பெற்றது. 2ம் அலையின் போதும் இதே நிலை வந்தது. சமீபமாக சென்ற ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களும் இந்த போக்கிலேயே இருந்தன பங்கு சந்தைகள்.

2021-ம் ஆண்டு இந்தியா உள்பட பல நாடுகளும் கண்ட விலைவாசி மிகக்கடுமையானது. இதனால் அமெரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் பணவீக்கத்தை சந்தித்தன. இந்தியாவை பொறுத்த வரையில் நுகர்வோர் விலைக் குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 5.6% அதிகரித்தது.

இந்த வாரம் மத்திம நாளான புதன் கிழமை நிலவரப்படி பங்குச் சந்தைகள் சரிவைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் சந்தித்த இழப்பு ஏறக்குறைய ரூ. 3 லட்சம் கோடி. அன்றைய தின இறுதியில் ‘சென்செக்ஸ்’ பிரிவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு 262.78 லட்சம் கோடியிலிருந்து 258.77 லட்சம் கோடியாக சரிந்தது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 581 புள்ளிகள் சரிந்தது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் ‘நிப்டி’யும் 168 புள்ளிகள் வீழ்ச்சியையே தொடர்ந்தது.