ஹிந்துஸ்தான் சிரிஞ்ச்ஸ் அண்ட் மெடிக்கல் டிவைசஸ் (HMD), இந்தியாவின் மிகப்பெரிய சிரிஞ்ச் உற்பத்தியாளர், ஹரியானா மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவைத் தொடர்ந்து அதன் ஆலைகளை மூடியுள்ளது. இந்தியாவின் மொத்த சிரிஞ்ச் தேவைகளில் மூன்றில் இரண்டு பங்கை பூர்த்தி செய்யும் இந்நிறுவனம் ஃபாரிதாபாத்தில் 11 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்திற்குள் நான்கு உற்பத்தி அலகுகளை இயக்குகிறது. வெள்ளிக்கிழமை அன்று அம்மாநில அரசு கேட்டுக்கொண்டதால் பேரில் பிரதான ஆலை உட்பட மூன்று ஆலைகளை இப்போது மூடியுள்ளது.

திங்கட்கிழமை முதல் உற்பத்தி பாதிப்பு இருக்கலாம்

HMD நிர்வாக இயக்குனர் ராஜீவ் நாத் கூறுகையில் “டிசம்பர் 11ம் தேதி மதியம், உற்பத்தியை நிறுத்த முடிவு செய்ததாகவும், பஃபர் ஸ்டாக் எதுவும் இரண்டு நாட்களுக்கு மேல் நிறுவனத்திடம் இல்லை என்றும் கூறினார். மேலும் தினசரி உற்பத்தி செய்யப்படும் 1.2 கோடி சிரிஞ்சுகள் வரும் திங்கட்கிழமையிலிருந்து கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார். இந்த 1.2 கோடி என்பது மற்றொரு ஆலையில் தயாரிக்கப்படும் 40 லட்சம் சிரிஞ்சுகளையும் சேர்த்ததே. 13ம் தேதியன்று HMD மூட திட்டமிட்டுள்ளது.

150 லட்சம் ஊசிகள் 80 லட்சம் சிரிஞ்சுகள் உற்பத்தி தாக்கம்

“இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் சிரிஞ்சுகள் ஏற்கனவே பற்றாக்குறையாக உள்ளன. எங்கள் ஆலைகளை மூடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதால் இந்த நெருக்கடி நிலை இன்னும் மோசமடைந்துள்ளது. இதன் தாக்கம் தினசரி 150 லட்சம் ஊசிகள் மற்றும் 80 லட்சம் சிரிஞ்சுகள் உற்பத்தி என்கிற ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நாத் குறிப்பிட்டார்.

HMD-யின் விளக்கத்தை ஏற்காத ஹரியானா மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

“ஃபாரிதாபாத்தில் உள்ள 228 யூனிட்களை மூட ஹரியானா மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. காரணம் எங்கள் ஆலைகள் டீசல் ஜெனெரேட்டர்களால் இயக்கப்படுகின்றன என்ற தவறான கருத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் கொண்டுள்ளது. அதனால் தான் ஆலைகள் இயங்குவதை தடை செய்கின்றது. எங்கள் ஆலைகள் அவ்வாறு டீசல் ஜெனெரேட்டர்களால் இயக்கப்படுவதில்லை என்று நாங்கள் எடுத்துக் கூறியும் கூட அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆலைகளுக்கு சீல் வைப்பது மற்றும் வழக்கு தொடர்வது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க தாமாகவே ஆலைகளை மூடி விட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டோம்” என்று கூறியுள்ளார் நாத்.

பிரதமர் மோடிக்கு HMD கடிதம்

இதுகுறித்து ஹிந்துஸ்தான் சிரிஞ்ச்ஸ் அண்ட் மெடிக்கல் டிவைசஸ் (HMD) பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் “சிரிஞ்சுகள் கோவிட்-19 தடுப்பூசி மற்றும் சுகாதார பராமரிப்புக்கு தேவைப்படும் இன்றியமையாத மருத்துவ சாதனங்கள் ஆகையால் அவை தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் முக்கிய மருத்துவ சாதனங்களாக அறிவிக்கபட வேண்டும் எனவும், அதன் உற்பத்தி ஆலைகள் தடையின்றி செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது”