இந்த நிதியாண்டிலேயே அடுத்த காலாண்டு தான் தங்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக மாருதி சுசூகி தெரிவித்துள்ளது. சிப் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பயணிகள் வாகன சந்தை முன்னணி நிறுவனங்கள் அதிக அளவு கார்கள் மற்றும் SUV-களை தயாரிக்க மிகவும் உதவியாக இருக்கும்.

பலேனோ மற்றும் ஸ்விஃப்ட் வாகன தயாரிப்பாளர்கள் ஜனவரியிலிருந்து மார்ச் மாதத்திற்குள் 470000 – 490000 வாகனங்களை உற்பத்தி செய்ய தங்களை தயார்படுத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கையை மட்டும் எட்ட முடிந்துவிட்டால் இந்த நிதியாண்டில் இறுதி காலாண்டில் இந்நிறுவனம் அதிகபட்ச வளர்ச்சியை எட்டியுள்ளது என்றே சொல்லலாம்.

இந்த வளர்ச்சியும் சாதாரணமானது அல்ல. கடந்த 10 ஆண்டுகளில் அடைய முடியாத உயரம். 1.65 மில்லியன் யூனிட்கள், 15% வளர்ச்சி விகிதம். கடைசியாக 2011-ஆம் ஆண்டுதான் தன் அதிகபட்ச வளர்ச்சி என்று 23.5 சதவீதத்தை இந்நிறுவனம் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வாகன தயாரிப்பாளர் சங்கம் கூறும் கருத்து

“தற்போது ஓமைக்ரான் பற்றிய அச்சம் ஆங்காங்கே வந்து கொண்டிருந்தாலும் ஏராளமான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாலும் அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருவதாலும் ஓமைக்ரான் பாதிப்பு பெரிய அளவு இருக்காது என்றே நம்பலாம். ஆகவே வாகன விற்பனையும் நிச்சயம் சிறப்பாக இருக்கும்” என்று இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்க கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல் ராஜேஷ் மேனன் நம்பிக்கையுடன் தன் கருத்தை தெரிவிக்கிறார்.