மின்சாரம் வாயிலாக விவசாயிகள் வருவாய் அடையலாம் என்ற நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ள திட்டமே ‘பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக் ஷா’ திட்டம். புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) நாட்டில் சோலார் பம்புகள், கிரிட் இணைக்கப்பட்ட சோலார் மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு விவசாயிகளுக்காக “பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஈவ் உத்தன் மஹாபியன் (PM KUSUM)” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

முகவர் நிறுவனங்களுக்கு மத்திய நிதி உதவி ரூ.34422 கோடி

25,750 மெகாவாட் திறன்கொண்ட சூரிய சக்தி மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளை 2022 ஆம் ஆண்டுக்குள் ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் இலக்கு. அதற்காக அத்திட்டத்தை செயல்படுத்தும் முகவர் நிறுவனங்களுக்கு மத்திய நிதி உதவி ரூ.34422 கோடி வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.

மேற்கூரை சூரிய சக்தி நிலையங்களால் கிடைக்கும் பயன்கள்

விவசாய நிலங்களில் மேற்கூரை சூரியசக்தி நிலையங்கள் அமைத்து அவற்றிலிருந்து கிடைக்கும்
மின்சாரத்தை பயன்படுத்தி விவசாய நிலங்களில் உள்ள மோட்டார் பம்ப்களை இயக்கலாம். அது போக இருக்கும் உபரி மின்சாரத்தை அவர்கள் மின் வாரியத்திற்கு விற்பனை செய்யலாம். இவ்வாறு, மழை குறைந்த அல்லது இல்லாத சமயங்களில் சாகுபடியில் பாதிப்படைந்தாலும் கூட, மின்சார விற்பனை மூலம் வருவாய் ஈட்டலாம். இத்திட்டத்தின் கீழ் மின் நிலையம் அமைக்கும் விவசாயிகளுக்கு, மத்திய அரசு 30% மானியம் வழங்குகிறது. இதேபோல், வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.

தமிழக மின்வாரியத்திற்கு அழைப்பு

இந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்து, மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங், வரும் 17ல் தமிழகம் உட்பட அனைத்து மாநில எரிசக்தி துறை செயலர்கள் மற்றும் மின் வாரிய தலைவர்களுடன் கலந்தாய்வு செய்ய உள்ளார். இதில் பங்கேற்க வருமாறு, தமிழக மின் வாரியத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அப்போது, தடையில்லாமல் சீராக மின் வினியோகம் செய்யவும், மின் இழப்பை தடுக்கவும் சமீபத்தில் துவக்கியுள்ள மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட மின் வினியோகம்திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

மாநிலங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி நிதி

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு இதற்காக ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலங்கள் தாங்கள் மேற்கொள்ள உள்ள பணி, தேவைப்படும் நிதி ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான திட்ட அறிக்கையை விரைவில் மத்திய அரசிடம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் திட்டத்தை செயல்படுத்தும் மாநில அரசுக்கு வழங்கப்பட்ட கடனில் 60% மானியமாக கணக்கிடப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் இந்த திட்ட அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை, கூடிய விரைவில் சமர்ப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.